Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல்லடம் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண இணைப்பு சாலை திட்டப்பணி தீவிரம்

பல்லடம்: பல்லடம் புறவழிச்சாலை திட்டத்தை 6 மாதங்களுக்குள் முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்லடத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின்போது அறிவிக்கப்பட்ட காளிவேலம்பட்டி-மாதப்பூர் புறவழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் மேற்கொள்ளப்பட இருந்தது.  ஆனால் இது கிடப்பில் போடப்பட்டது. தற்போது பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் இருந்து, மாதப்பூர் வரை செல்லும் வகையில், புதிய புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்துள்ளது. அதேசமயம் இத்திட்டத்தை விரைவுபடுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இது குறித்து பல்லடம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில் அரசு கூறியதாவது:பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, கட்டாயம் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் உத்தரவு. இதன்படி செட்டிபாளையம் ரோடு, சின்னியகவுண்டம்பாளையம் அருகே ஆரம்பித்து, பணிக்கம்பட்டி, நாசுவம்பாளையம், சித்தம்பலம், ஆலுத்துப்பாளையம் வழியாக தாராபுரம் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் 7.5 கி.மீ தூரம், 10 மீட்டர் அகலத்துடன் 54 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலை அமைய உள்ளது. முதல் கட்டமாக நிலம் எடுப்பு பணிகள் துவங்கியுள்ளன.

புறவழிச்சாலை அமையவுள்ள கிராமங்களில் இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு இழப்பீடு தீர்மானிக்கப்படும். பணிகள் விரைவுபடுத்தப்பட்டு ஆறு மாதங்களுக்குள் சாலை அமைக்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புறவழிச்சாலை அமைந்தால் பல்லடம் நகரப் பகுதிக்குள் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.