Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மழை காலம் துவங்கியதால் மரக்கரி விற்பனை ஜோர்

*ஒரு மூட்டை ரூ.1,550க்கு விற்பனை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்காலம் துவங்கி விட்டதால், சீமை கருவேல மரக்கரியை விற்பதில் விவசாயிகள், வியாபாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

மன்னர்கள் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் காலக்கட்டத்தில் நீர் மேலாண்மைக்கும், குடிமராமத்திற்கும் முன்னோடி மாவட்டமாக திகழ்ந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழையின்றியும், நீர்வரத்திற்கு வழியின்றி தொடர் வறட்சியால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டது.

அப்போது தரிசாக விடப்பட்ட விவசாய நிலங்கள், தண்ணீரின்றி வறண்ட கண்மாய், குளம், நீர்வழித்தடங்களில் 1950ம் ஆண்டில் விதைக்கப்பட்ட சீமை கருவேல மரங்கள் வளர தொடங்கியது.

அரை நூற்றாண்டு காலமாக முற்றிலும் அழிக்க முடியாத, விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற இம்மரமானது மாவட்டத்தின் நிலப்பரப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சீமை கருவேல மரங்கள் உள்ளது. மரக்கரி பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்பட்டு வரும் அவை விவசாயத்திற்கு அடுத்தப்படியாக, விவசாய கூலி தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை தருவதில் முக்கிய பங்காற்றுகிறது.

இதனால் சீமை கருவேல மரத்தை வெட்டுவது முதல் கரிமூட்டத்தில் சுட்டு, கரியாக்கி விற்பனை செய்வது வரையிலும் தடையின்றி நடக்கின்ற ஒரு முக்கிய தொழிலாக உள்ளது.

மாவட்டத்தில் அனை த்து பகுதியிலும் சீமை கருவே மர கரிமூட்ட தொழில் நடந்து வந்தாலும், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, பரமக்குடி, நயினார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக கரிமூட்டம் தொழில் கைகொடுக்கிறது. இதனால் கருவேல மரம் வெட்டுதல், கட்டை பிடுங்குதல், கரிமூட்டத்திற்கு விறகு சுமத்தல், அடுக்குதல், சுடுதல் உள்ளிட்ட கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

இதுபோன்று கரிமூட்டம் போட்டு, கரியை பிரித்து தரம்பிரித்து வைக்கப்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால் சேமிக்கப்பட்டு இருக்கும் கரிகளை விற்பனை செய்வதில் விவசாயிகள் சிறுவியாபாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

விவசாயிகள், கரிமூட்ட தொழிலாளர்கள் கூறும்போது, சீமை கருவேல மரத்தின் கிளைகளை சீவுதல், வெட்டுதல், சிறு துண்டுகளாக வெட்டுதல், கரிமூட்டத்திற்கு விறகு அடுக்குதல், கரிமூட்டத்தை பிரித்து கரிசேர்த்தல் போன்ற பணிகளுக்கு ஆண்களுக்கு ரூ.500 முதல் 600ம், பெண்களுக்கு ரூ.300 முதல் 400 கூலியாக கொடுக்கப்படுகிறது. கரியை மூட்டையில் கட்டி ஏற்றுவதற்கு ரூ.800 முதல் 1000 வரையிலும் கூலியாக வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி உள்ளிட்ட வெளிமாவட்ட பகுதியிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் செங்கல்சூளை, மாடர்ன் ரைஸ்மில், தொழிற்சாலைகள், சுண்ணாம்பு சூலை, சிவகாசி பட்டாசு தொழிற்சாலை, நீராவியால் இயங்கும் தொழிற்சாலை, கொள்ளம்பட்டரை போன்றவற்றின் பயன்பாட்டிற்கும், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சீமை கருவேல மரத்துண்டுகள் மற்றும் சுடப்பட்ட கரித்துண்டுகளை வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உரிய விலை கிடைக்காமல் தேக்கமடைந்த விறகுகள், விற்பனை செய்யாமல் இருப்பு வைக்கப்பட்ட கரிகள், பிப்ரவரி மாதத்திற்கு பிறகு வெட்டப்பட்ட விறகுகளை கரிமூட்டம் போட்டு கரி தரம்பிரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டு இருந்தது. தற்போது வரை வெட்டப்பட்டு காய்ந்து கிடந்த விறகுகளை அடுக்கி கரிமூட்டம் போடப்பட்டு வருகிறது.

மாவட்டத்தின் பிரதான வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே மழை கடந்த ஒரு வாரமாக பெய்ய துவங்கி விட்டது. விவசாய பணிகளும் துவங்கி விட்டதால் அதில் கவனம் செலுத்தும் நிலை உள்ளது. எனவே இருக்கின்ற கரியை போகின்ற விலைக்கு விற்று வருகிறோம்.

60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பருமனான கரி ரூ.1,550க்கும், இரண்டாம் தர கரி ரூ.1,220க்கும் விற்பனை ஆகிறது. இதனை உள்ளூர் பகுதி வியாபாரிகள் வாங்கி வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு விற்று வருகின்றனர். கரி விற்பனை முடிந்ததும், 4மாதங்களுக்கு விவசாய பணிகளில் ஈடுபட உள்ளோம். அடுத்த கோடையில் மீண்டும் விறகு வெட்டுதல், கரிமூட்டம் பணி துவங்கும் என்றனர்.