Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்னிந்தியாவில் முதன்முறையாக மூளை ரத்த குழாய் வீக்கத்திற்கு நெக் ஸ்டென்ட் நவீன சிகிச்சை: மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை சாதனை

சென்னை: தென்னிந்தியாவில் முதன் முறையாக, மூளை ரத்த குழாயில் ஏற்பட்ட வீக்கத்திற்கு ‘நெக் ஸ்டென்ட்’ என்ற நவீன சிகிச்சை மூலம் மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. ஆவடியை சேர்ந்தவர் உஷாராணி (65) இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தீராத தலைவலி காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ நிபுணர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்தபோது, அவரது மூளையில் 2 ஆக பிரிந்து செல்லும் ரத்த குழாயின் நடுப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது தெரிந்தது. நடைமுறையில உள்ள ஒய்ஸ்டென்ட் சிகிச்சைக்கு மாற்றாக நவீன வலை போன்ற நெக் ஸ்டென்ட் என்ற கருவியை ரத்த குழாயில் வீங்கிய பகுதிக்குள் பொருத்தி, வீக்கத்தை தடுத்துள்ளனர். இந்த சிகிச்சை முறை தென்னிந்தியாவில் முதன்முறையாக மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை நடத்தி சாதனை படைத்துள்ளது.

இந்த சிகிச்சை முறை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு மியாட் மருத்துவமனையில் நடந்தது. அப்போது, மருத்துவமனையில் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், மூளை சிகிச்சை நிபுணர் கார்த்திகேயன், நவீன முறை சிகிச்சை பெற்ற ஆவடியை சேர்ந்த உஷாராணி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது இந்த சிகிச்சை முறை குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறியதாவது: பொதுவாக மூளைக்குள் செல்லும் ரத்த குழாய் பிரியும் பகுதியில் ஒருவித வீக்கம் ஏற்படும். இதனை அனியுரிசம் என்பார்கள். அந்த ரத்த நாள வீக்கத்தினை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், அது சிதைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு, பக்கவாதம், உயிரிழப்பு ஏற்படும். இது பிறப்பு குறைபாடு, புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படலாம். இதன் அறிகுறியாக கடுமையான தலைவலி அடிக்கடி ஏற்படும்.

முன்பெல்லாம் மூளையை திறந்து, வீக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் கிளிப் முறையை பயன்படுததவார்கள். ஆனால், உஷாராணிக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருப்பதால், அந்த சிகிச்சை முறை சாத்தியமில்லாமல் போனது. ஒய்-ஸ்டென்ட் முறையில் வாழ்நாள் முழுவதும் ரத்தம் உறையாமல் இருக்க மருந்து மாத்திரை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உஷாராணிக்கு நீண்டகால சிறுநீரக நோய் இருப்பதால் இந்த சிகிச்சையும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, புது முயற்சியாக, ‘நெக் ஸ்டென்ட்’ பொருத்துவது என முடிவு செய்தோம். இது ஐரோப்பிய நாடுகளில், 2020ல் அறிமுகம் ஆனது. இந்தியாவில், 2022ல் இந்த தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது. உஷாராணிக்கு மூளை ரத்த குழாய் வீக்கம், 17 மி.மீ. இருந்தது. இதையடுத்து, அவருக்கு இடுப்பில் நுண்ணிய துளை போட்டு அதன் வாயிலாக மூளைக்கு, ‘நெக் ஸ்டென்ட்’ செலுத்தி வீங்கிய இடத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நவீன சிகிச்சை 2.30 மணிநேரம் நடந்தது.

தென்னிந்தியாவில் முதன் முறையாக இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. உஷாராணியும் நலமுடன் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். உஷாராணி கூறுகையில், ‘‘தீராத தலைவலி காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தேன். ஆகஸ்ட் மாதம் தாங்க முடியாத தலைவலி இருந்ததால், மியாட் மருத்துவமனைக்கு வந்தேன். மருத்துவர்கள் குழு நல்ல முறையில் எனக்கு சிகிச்சை அளித்தது. இப்போது தலைவலி இல்லை. நலமுடன் இருக்கிறேன். மருத்துவர் மல்லிகாமோகன்தாசுக்கும், சிகிச்சை அளித்த டாக்டர் கார்த்திகேயனுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்.