சென்னை: நகராட்சி நிர்வாகப் பணி நியமனம் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் வேலைவாய்ப்பு ஊழல் தொடர்பாக, அமலாக்கத்துறை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த துறையில் 2538 அதிகாரிகள், பொறியாளர்களை நியமித்ததில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இதனால், தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, திமுக அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
  
  
  
   
