சென்னை: திருவொற்றியூரில் சுற்றித்திரிந்த மெக்சிகன் ஸ்பைடர் வகை குரங்கை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். திருவொற்றியூர் காலடிப்பேட்டை புது தெருவில் நேற்று மாலை மெக்சிகன் ஸ்பைடர் குரங்கு ஒன்று சுற்றித்திரிவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, திருவொற்றியூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ஸ்பைடர் குரங்கு ஒன்று மின்சார வயர், மரங்கள் மீது தாவிக் கொண்டிருந்தது. இதையடுத்து, போலீசார் வேளச்சேரி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, விரைந்து வந்த 3 வனத்துறை ஊழியர்கள் வீட்டுக்கு வீடு தாவிக் கொண்டிருந்த ஸ்பைடர் குரங்கை கயிற்றை போட்டு லாவகமாக பிடித்து கூண்டில் அடைத்தனர். வெளிநாட்டு வகையைச் சேர்ந்த ஸ்பைடர் குரங்கை அனுமதி பெற்று வளர்க்கலாம். அப்படி யாரோ வளர்த்த குரங்கு தப்பி ஓடி வந்து இருக்கலாம் என்றும், பிடிபட்ட ஸ்பைடர் குரங்கை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.