மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் தரமான நாற்று உற்பத்தி குறித்து வனத்துறையினருக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வனத்துறையினருக்கான பயிற்சி வகுப்பு கடந்த இரு தினங்களாக நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் சேலம், தேனி, முதுமலை, நாமக்கல், ஆத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 18 வனவர்கள், 18 வன காவலர்கள் என 36 பேர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி முகாமிற்கு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் நிஹார் ரஞ்சன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.பயிற்சி முகாமில் துறை தலைவர் பாலசுப்ரமணியம் பேசுகையில்: நாட்டின் வன வளத்தை அதிகரிக்க தரமான மர நாற்றுக்களை வனப்பகுதியில் நட்டு வளர்க்க வேண்டும்.
விவசாயம் செய்யாத நிலங்களில் மர நாற்றுக்களை அதிகளவில் நடவு செய்ய வேண்டும். இதேபோல் விவசாய நிலங்களிலும் அதிக அளவில் மரங்களை வளர்ப்பதின் வாயிலாக அவர்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். மரங்களின் இறக்குமதியும் குறையும்.
இதேபோல் மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு பாதுகாக்கும் போது சுற்றுச்சூழல் மாசு குறையும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் வனத்துறையினருக்கு பேராசிரியர்கள் சிவப்பிரகாஷ் மற்றும் சிவக்குமார் உள்ளிட்டோர் நாற்றுகளை உற்பத்தி செய்யும் நாற்றங்கால் பகுதிக்கு அழைத்து சென்று தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்வது குறித்து பயிற்சி அளித்தனர்.