Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி தகவல் உண்மையில்லை: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: மேகதாதுவில் அணை கட்டுவதற்காக உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வெளிவரும் தகவல்களில் எள்ளளவும் உண்மை இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெவித்தார். இதுதொடர்பாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஓர் அணையை மேகதாதுவில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாக தயாரித்து, மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 2018ம் ஆண்டில் சமர்ப்பித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது.

கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியை ஒதுக்கியபோது, தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, அதற்கான எந்தவிதமான அனுமதியையும் அளிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 21-3-2022 அன்று தீர்மானத்தையும் இந்த அரசு நிறைவேற்றியது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் 31-3-2022 மற்றும் 26-5-2022 அன்று நேரில் சந்தித்த போது மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய ஜல்சக்தி அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் வலியுறுத்தினார்.  இந்த சூழ்நிலையில், மேகதாது அணை குறித்துப் பேசிய கர்நாடக மாநில முதலமைச்சர், இந்த பாசன ஆண்டு 2025-26ல் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய நீரின் அளவை விட கூடுதலாக நீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ள கூற்று எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடிய ஆண்டுகளில் வேறுவழியின்றி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு நீரைத் திறந்து விடுகிறதேயன்றி, வறட்சி ஆண்டுகளில் நமக்கு விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்கான நீர் வழங்கப்படுவது இல்லை. மேகதாது அணை கட்டப்பட்டால் வறட்சி ஆண்டுகளில், நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் கிடைக்காத சூழல் உருவாகும் என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

எனவே, மேகதாதுவில் அணை கட்டப்படுவது என்பது, தமிழ்நாட்டு விவசாயிகளை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குவதோடு, காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பான நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணாகவும் அமையும் என்பதே நிதர்சனமான உண்மையாகும். இந்நிலையில், இந்த அணை தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், நேற்று மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கருத்துகள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம்.

தமிழ்நாடு அரசின் கருத்துகளைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என ஆணையிட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், வெற்றிகரமாக மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியதைப் போன்றே, இனியும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய நீர்வளக் குழுமத்தின் முன்பும் தமிழ்நாடு அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது.

இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை. முதலமைச்சரின் தலைமையில் செயல்படும் திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை, காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்தவொரு முயற்சியையும், தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறியும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.