அண்ணாநகர்: அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தேஜேஷ் (20), நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று காலை சொகுசு காரில், கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். வழியில், அண்ணாநகரை சேர்ந்த தனது கல்லூரி நண்பர் நவீன் (20) என்பவரையும் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். அமைந்தகரை, என்.எஸ்.கே நகர் அருகே சென்றபோது, இன்ஜின் பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறியது.
உடனே காரை சாலையோரம் நிறுத்தி விட்டு இருவரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் சொகுசு கார் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தகவலறிந்த அண்ணாநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேட்டரியில் மின்கசிவு காரணமாக கார் தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.