Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுவாபுரி முருகன் கோயிலில் அன்னதான திட்டத்துக்காக இ-உண்டியல் சேவை அறிமுகம்

* க்யூ ஆர் குறியீடை பயன்படுத்தி காணிக்கை செலுத்தலாம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அன்னதான திட்டத்திற்காக இ-உண்டியல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் க்யூ ஆர் குறியீடை பயன்படுத்தி பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சின்னம்பேடு சிறுவாபுரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற  பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக இங்கு 6 வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் இக்கோயிலுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர்.

இந்நிலையில் பக்தர்களுக்காக கோயிலில் அன்னதான நிகழ்ச்சி தொடங்கி நாள்தோறும் 100 பேருக்கும், விழா நாட்களில் 500 பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பக்தர்கள் எளிய முறையில் காணிக்கை செலுத்த ஆலய வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக ஆலய வளாகத்தில் இ-உண்டியல் முறையில் க்யூ ஆர் குறியீடு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த க்யூ ஆர் குறியீடு மூலம் செலுத்தும் பணம் பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானத்திற்காக ஆலய வங்கியின் கணக்கில் நேரடியாக சென்று சேரும் வகையில் இந்த திட்டம் தொடகப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா நேற்று முன்தினம் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வேலூர் மண்டல மேலாளர் ராஜசேகர், ஆரணி இந்தியன் ஓவர்சீஸ் கிளை மேலாளர் நரசிம்மஹா ராவ், பெரியபாளையம் கிளை மேலாளர் வெங்கடேஸ்வரலு, சிறுவாபுரி கோயில் தலைமை குருக்கள் ஆனந்தன் உள்ளிட்டோர் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இ- உண்டியல் சேவையை பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். முதல் நாளிலேயே பக்தர்கள் பலர் அன்னதானத்திற்காக க்யூ ஆர் குறியீடு மூலம் காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் இ-உண்டியல் சேவையை பயன்படுத்தி காணிக்கை செலுத்தி வருகின்றனர்.