Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குறைந்த விலைக்கு வாங்கி வேலூரில் குடோன்களில் மாதக்கணக்கில் பதுக்கி வைக்கின்றனர்; ஸ்டிக்கர் ஒட்டி காலாவதியான ஆப்பிள்கள் விற்பனை அதிகரிப்பு

* அழுகிப்போன திராட்சை பழங்கள் விற்பனையும் ஜோர்

* ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்ைக

வேலூர்: வேலூரில் குறைந்த விலைக்கு டன் கணக்கில் வாங்கி குடோன்களில் பதுக்கி வைத்து காலாவதியான ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள்கள் தினசரி பொதுமக்களுக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. மக்கள் உடல்நலனை பாதிக்கும் முன் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை, அதற்கேற்றவாறு அதிகரிக்கும் உணவு மற்றும் நுகர்பொருள் தேவை என்பது இன்றைய உலகில் பெரும் சிக்கலை தந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக 140 கோடியை தாண்டியுள்ள இந்திய மக்கள் தொகை பெருக்கம்தான் இன்று உலக நாடுகளை இந்தியாவை தங்களின் உற்பத்தி மற்றும் வேளாண் பொருட்களை விற்கும் சந்தையாக கருதும் நிலைக்கு உந்தி தள்ளுகிறது. இந்த தேவை அதிகரிப்புதான் உணவு பொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவையை நாட்டை ஆளும் அரசாங்களுக்கு உருவாக்கியுள்ளது.

விளைவு, மிக குறுகிய காலத்தில் விளையக்கூடிய உணவு தானியங்களின் விதைகளை உருவாக்குவது, காய், கனிகளிலும் மரபணு மாற்ற விதைகளை புகுத்துவது என தொழில்நுட்பம் என்ற பெயரிலும், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற பொருளிலும் உலகமே இயற்கையுடன் இணைந்த முறைகளில் விளையும் உணவு தானியங்களையும், காய்கனிகளையும் மறந்துவிட்டு காலத்தின் வேகத்திற்கேற்ப மரபணு மாற்றத்தால் உருவான காய்கறிகளையும், தானிய வகைகளையும் நாடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மரபணு மாற்றம் மூலம் உருவான பழங்களில் கூடுதலாக பழுக்க வைக்கும் தொழில்நுட்பம்தான் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது. கார்பைட் கற்களை கொண்டு பழுக்க வைப்பது, ரசாயன திரவத்தை தெளித்து பழுக்க வைப்பது, ரசாயன திரவத்தை ஊசி மூலம் காய்களில் செலுத்தி பழுக்க வைப்பது போன்ற அபாயகரமான முறைகள் மக்களை பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக்கும் என்பது தெரிந்தும் இந்த விதிமீறல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இத்தகைய மக்கள் விரும்பும் பழ வகைகளில் ஆப்பிளுக்கு தனியிடம் உண்டு. ஆப்பிளை பொறுத்தவரை அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் பழ வகையாக உள்ளது. குறிப்பாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகளவில் ஆப்பிளை நுகர்கின்றனர். காரணம், அதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. ஒரு நாளைக்கு மனித உடலுக்கு தேவையான 14 சதவீத வைட்டமின்களை கொண்டுள்ளது. ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும். ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச்செல்கள் அழியாமல் பாதுகாப்பதுடன், நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. அதேபோல் ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்க உதவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி, உடலுக்கு அதிக சக்தி தரக்கூடிய பழம் என்பதால், அனைத்து தரப்பு மக்களும், ஆப்பிள் வாங்கி உண்கின்றனர். இதனால் இதன் தேைவ என்பது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் சாலையோர பழக்கடைகளில் விற்பனையாகும் பழங்களில் ஆப்பிள் முதலிடம் வகிக்கிறது. மக்கள் அதிகளவில் ஆப்பிள் வாங்கி உண்பதால், தற்போது ஸ்டிக்கர் ஒட்டி காலாவதியான ஆப்பிள்கள், அழுகிய ஆப்பிள்கள் விற்பனையும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக வேலூர், காட்பாடி பகுதிகளில் ஸ்டிக்கர் ஒட்டி காலாவதியான மற்றும் அழுகிய ஆப்பிள்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. குறைந்த விலைக்கு டன்கணக்கில் மொத்தமாக வாங்கப்படும் ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள்கள் வேலூர் அருகே விருதம்பட்டு உட்பட சில இடங்களில் உள்ள குடோன்களில் மாதக்கணக்கில் பதுக்கி ஸ்டாக் வைக்கின்றனர்.

பின்னர் தினமும் தேவைக்கு ஏற்ப அங்கிருந்து ஆப்பிள் பாக்ஸ்களை விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு காலாவதியாகியும் கெட்டுப்போயும் உள்ள ஆப்பிள்கள் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்பகிறது. ஆப்பிள்கள் மட்டுமின்றி, திராட்சை, ஆரஞ்சு, மாதுளம்பழம் என்று குறிப்பிட்ட இடங்களில் அழுகிய பழங்கள் விற்பனை தடையின்றி நடந்து வருகிறது. எனவே, மக்களின் உடல்நிலை பாதிப்பு ஏற்படும் முன் உணவு பாதுகாப்புத்துறையினர் வேலூர், காட்பாடி பகுதிகளில் ஆய்வு செய்து, அழுகிய ஆப்பிள்கள், திராட்சை போன்ற பழங்களின் விற்பனையை தடுத்து மக்களின் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் கூறுகையில், ‘காலாவதியான மற்றும் அழுகிய பழங்கள் உண்பதால் வயிற்றுபோக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை பெற வேண்டும். எனவே பொதுமக்கள் குறைந்த விலைக்கு பழங்கள் கிடைக்கிறது என்று அதனை வாங்கி சாப்பிடக்கூடாது. சந்தைகளில் அன்றைய தினத்தில் என்ன விலை? சாலையோரங்களில் அதே ஆப்பிள் விலை ஏன் குறைவாக உள்ளது என்று யோசிக்க வேண்டும். கெட்டுபோன பழங்களாக இருப்பதால் தான் சிலர் அதனை விற்கின்றனர். பொதுமக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும், என்றார்.

குளிர்சாதன பெட்டிகளில் அடை காக்கப்படும் ஆப்பிள்

ஆப்பிள் விளைச்சல் அதிகம் உள்ள நாட்களில் குறைந்த விலையில் கிடைக்கும் ஆப்பிள்களை மொத்த வியாபாரிகள் டன் கணக்கில் வாங்கி குளிர்சாதன பெட்டிகளில் வைத்து மாதக்கணக்கில் பாதுகாக்கின்றனர். இந்த குளிர்சாதன பெட்டிகளுக்கு ஜெனரேட்டர் வசதி இல்லாத நிலையில் மின்தடை ஏற்படும்போதெல்லாம் இப்பழம் அழுகும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

அதேநேரத்தில் அதன் மேற்புறம் அழுகலுக்கான அடையாளம் தெரியாது என்பதால், ஸ்டிக்கர் ஒட்டி இவை சந்தையில் தாராளமாக விற்கப்படுகிறது. இதை வாங்கி செல்லும் மக்கள் வீட்டுக்கு சென்றதும் அதை அறுத்து பார்க்கும்போதுதான் அதன் அழுகிய நிலை தெரிய வருகிறது. இதுவும் ஒரு மோசடிதான் என்பதை தெரிந்தே இத்தகைய செயலில் ஒரு சில வியாபாரிகள் ஈடுபடுகின்றனர்.

அதேபோல் மாதக்கணக்கில் குளிர்சாதன பெட்டியில் பாதுகாக்கப்படும் ஆப்பிள் உட்பட எந்த பழவகையானாலும் ரசாயன மாற்றத்துக்கு உள்ளாகும். இது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதும் டாக்டர்களின் கருத்தாக உள்ளது.

பழமையான முறைக்கு மாற வேண்டும்

வாழைப்பழம், மாம்பழம், அன்னாசிப்பழம், தர்பூசணி, கொய்யா, பப்பாளி போன்ற அனைத்து பழங்கள் கார்பைட் கற்கள், ரசாயன திரவம் தெளிப்பு, ஊசி மூலம் கலப்பு என பல்வேறு வகைகளில் தற்போது பழுக்க வைக்கப்படுகிறது. இது மிகவும் அபாயகரமானது. அதேநேரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வாழைக்குலையை பழ மண்டிகளின் பின்னால் உள்ள மண் தரையில் குழிதோண்டி வாழைக்குலையையும், அதனுடன் சாணி வரட்டியை கொளுத்தி நெருப்பாக்கி வைத்தும் வாழை இலை கொண்டு குழியை மூடிவிடுவர். இரண்டொரு நாட்களில் வாழைக்குலை பழுத்துவிடும். அல்லது மூடப்பட்ட அறையில் மாங்காய், அன்னாசி, வாழைக்குலைகள், பப்பாளி என்று பழ வகைகளை வைத்து வைக்கோல் போரால் மூடிவிடுவர். சில நாட்களில் உள்ளே வைக்கப்பட்ட காய்கள், பழுத்த பழங்களாவிடும். இந்த முறையில் உடலுக்கு எந்த பாதிப்புமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள்கள் மேல் ஸ்டிக்கர் ஒட்டுவது ஏன்?

ஆப்பிள்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களுக்கான காரணம் அந்த ஆப்பிள் எப்படி விளைவிக்கப்பட்டது என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பில்யு கோடு என்று கூறுகின்றனர். அதாவது பிரைஸ் லுக்அப் நம்பர். இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கையானதா, மரபணு மாற்று உற்பத்தியா, வேதி உரங்களில் விளைந்ததா என்று அறிந்து கொள்ள முடியும். பில்யு கோடில் 4 எண்கள் இருந்தால் வேதி உரம் கலந்து உற்பத்தி செய்யப்பட்டது. பிஎல்யு கோடில் 5 இலக்கம் இருந்து, 8 என்று ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யப்பட்டது. பில்யு கோடில் 5 இலக்கம் இருந்து அது 9 என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது. எனவே இனி இயற்கையான ஆப்பிள்களை தேடி வாங்கி பயன்படுத்தலாம்.