திருவொற்றியூர்: திருவொற்றியூரில் வீடு இடிந்துவிழுந்ததில் பாட்டியும் பேரனும் உயிர் தப்பினர். சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருவொற்றியூர், கார்கில் நகர், ராஜாஜி நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி சார்பில் ராட்சத மோட்டார் மூலம் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மணலி நெடுஞ்சாலை, டி.பி.பி.சாலை, காமராஜ் சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது. ஆனால் அவற்றை உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் அகற்றிதால் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்த பகுதியில் சாலையோரம் மற்றும் வீடுகளில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.
இந்த நிலையில், திருவொற்றியூர் குப்பம் பகுதியை சேர்ந்த தேசராணி (74) என்பவரின் ஓட்டு வீடு திடீரென இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த தேசராணி, அவரது பேரன் ஆகியோர் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் வந்து ஓடுகளை அகற்றி இருவரையும் மீட்டனர். இதில் லேசான காயம் அடைந்திருந்த தேசராணி, அவரது பேரன் ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வீட்டில் இருந்த கேஸ் ஸ்டவ், வாஷிங் மெஷின் சேதம் அடைந்தது. இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.