Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழவேற்காடு அருகே சாலை வசதி இல்லாததால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய படகில் கொண்டு செல்லும் அவலம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பொன்னேரி: பொன்னேரி தொகுதி, பழவேற்காடு அருகே உள்ள கோட்டைக்குப்பம் கிராமத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சாலையில் வழி இல்லாததால், படகில் சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கோட்டைகுப்பம் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு 100 மீட்டர் அளவிற்கு தார் சாலை போடும் பணி தொடங்கப்பட்டு, பாதியிலேயே நின்றது. கோட்டைக்குப்பம் கிராமத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்வதற்கு இந்த சாலையை பயன்படுத்த வேண்டும். ஆனால், சாலை போடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் மீதி தூரத்தை சேற்றிலும், சகதியிலும், முள் புதரிலும் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், மழைக்காலங்களில் இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால், இடுப்பு அளவிலான தண்ணீரில் இறந்தவர்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பெருவெள்ளம், புயல் போன்ற காலங்களில் படகில் ஏற்றி சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலையில் உள்ளனர். இந்நிலையில், நேற்று கோட்டைக்குப்பத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் மரணம் அடைந்தார். அவரை தூக்கிச் செல்வதற்கு வழி இல்லாத காரணத்தினால் படகை பயன்படுத்தி சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். ஆபத்தான நிலையில் படகில் பயணித்து சுடுகாட்டுக்கு சென்று சடலத்தை அடக்கம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண, பாதையை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.