முன்னாள் எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு ஓய்வூதியம் ரூ.35ஆயிரமாக உயர்த்தி வழங்கும் சட்ட மசோதா: அமைச்சர் துரைமுருகன் தாக்கல்
தமிழக சட்டப் பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது: சட்டப் பேரவை அல்லது சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு (முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்சிக்கள்) மாதமொன்றுக்கு ரூ.30 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இது, கடந்த ஏப்ரல் 1ம்தேதியில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் கடந்த ஏப்ரல் 26ம்தேதி அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் நோக்கத்தில் அதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா நாளை பேரவையில் நிறைவேற்றப்படும்.