வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி சோதனைச்சாவடி அருகே உள்ள தும்பேரி ஊராட்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் வாழை, தென்னை பயிரிட்டுள்ளார். இவரது நிலத்தின் அருகே உள்ள கோவிந்தராஜ் என்பவர் தனது 3 ஏக்கர் நிலத்தில் தென்னை, நெல், வாழை, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களை பயரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஒரு குட்டி யானை விவசாய நிலத்தில் நுழைவதாக அவ்வழியாகச் சென்றவர்கள் கூறினர். இதையடுத்து முருகேசன், கோவிந்தராஜ் ஆகியோர் தங்களது விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த வாழை மற்றும் நெற்பயிர்கள், தென்னை உள்ளிட்டவைகள் ஒற்றை காட்டு யானை சேதமாக்கியது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் வனத்துறை அலுவலர் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அட்டகாசம் செய்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறை அலுவலர் குமார் கூறுகையில், ஆந்திர வனப்பகுதி மாதக்கடப்பா வழியாக ஒரு குட்டி யானை சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த குட்டி யானைதான் இங்குள்ள விவசாய நிலத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து தமிழக-ஆந்திர வனப்பகுதியில் யானையின் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.
தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மலைப்பாதைகளில் செல்லும்போது மிக கவனமாக செல்ல வேண்டும். யானை நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் என வனத்துறை அலுவலர் குமார் தெரிவித்தார். இந்த குட்டி யானை கடந்த 31ம்தேதி இதே பகுதிக்கு வந்து பயிர்களை சேதப்படுத்தி சென்றது குறிப்பிடத்தக்கது.