பேரிடர் காலங்களில் தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வகையில் வாகனங்களை வாங்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்
சென்னை: பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘. பேரிடர் மீட்பு பணிகளுக்காக கடந்த ஆண்டில் ரூ.193.93 கோடியில் மீட்பு உபகரணம் மற்றும் கனரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்திற்கு அதிகாரிகளை அனுப்பி தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் வகையில் பேரிடர் மீட்பு வாகனங்களை வாங்க ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேரிடருக்கு தனியாக நிதி உள்ளது. ஒன்றிய அரசு நிதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும், தமிழக அரசின் நிதியை ஒதுக்கி பேரிடர் உபகரணங்களை கொள்முதல் செய்வோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
* காபித்தூள் தொழில் தொடங்க தொழில்முனைவோருக்கு மானியம்
ஏற்காடு எம்எல்ஏ கு.சித்ரா (அதிமுக) கேள்விக்கு பதில் அளித்து குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கூடிய - வங்கி கடன் உதவி எம்எஸ்எம்இ துறையின் மூலம் வழங்கப்படுகிறது. காபி தூள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்பட 523 நிறுவனங்களுக்கு ரூ.27 கோடியே 50 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்காடு தொகுதியில், காபி தூள் தொழில் தொடங்க முன் வரும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு இந்த துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் மானியம் மற்றும் கடன் உதவிகள் வழங்கப்படும் என்றார்.