Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீர்வரத்து அதிகரிப்பால் ரம்மியமாக காட்சியளிக்கும் போர்த்தி அணை

*சுற்றுலா பயணிகள் ரசிப்பு

மஞ்சூர் : மஞ்சூர் அருகே நீர்வரத்து அதிகரிப்பால் ரம்மியமாக காட்சியளிக்கும் போர்த்தி அணையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் 12 நீர்மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, கிளன்மார்கன் உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மேற்படி மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் குந்தா மின்நிலையத்தில் 60 மெகாவாட், கெத்தை மின்நிலையத்தில் 175 மெகாவாட், பரளி மின் நிலையத்தில் 180 மெகாவாட், பில்லுார் மின்நிலையத்தில் 100 மெகாவாட், அவலாஞ்சி மின்நிலையத்தில் 40 மெகாவாட், காட்டுகுப்பை மின்நிலையத்தில் 30 மெகாவாட், சிங்காரா மின் நிலையத்தில் 150 மெகாவாட், பைக்காரா மின்நிலையத்தில் 59.2 மெகாவாட், பைக்காரா மைக்ரோ மின்நிலையத்தில் 2 மெகாவாட், முக்குருத்தி மைக்ரோ மின்நிலையத்தில் 0.70 மெகாவாட், மாயார் மின்நிலையத்தில் 36 மெகாவாட், மரவகண்டி மின்நிலையத்தில் 0.75 மெகாவாட் என மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் உள்ளவையாக உள்ளது.

மாநிலத்தில் மொத்த மின் உற்பத்தியில் 10 சதவீதம் மின்சாரம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மின்தேவை அதிகமாக உள்ள ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களின் மின்தேவையை மேற்படி நீர் மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் மின் நிலையங்களில் இருந்து ெவளியேற்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது.

கடந்த ஜூன் மாதம் துவங்கிய மழை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் வரை நீடித்ததால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. மஞ்சூர் அருகே மின்சார உற்பத்திக்கு நீராதாரமான உள்ள எமரால்டு மற்றும் அவலாஞ்சி அணைகளின் நீர்மட்டம் பெருமளவு உயர்ந்துள்ளது.

அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதை தொடர்ந்து அவலாஞ்சி நீர்பிடிப்பு பகுதியான போர்த்தி அணையிலும் நீர்இருப்பு பெருமளவு உயர்ந்து அணை ரம்மியமாக காட்சியளிக்கிறது.

மஞ்சூர் ஊட்டி சாலையில் இத்தலார் அருகே உள்ள போர்த்தி அணை சாலையில் இருந்து பார்வையிடும் வகையில் அமைந்துள்ளது.

மலைகளுக்கு இடையே தேயிலை, மலை காய்கறிகள் தோட்டங்கள் சூழ இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் உள்ளதால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் போர்த்தி அணை பகுதிக்கு சென்று அணையை பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்.