சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் புறப்பட்டு செல்ல வேண்டிய பெங்களூரு, கோவை, டெல்லி, மும்பை, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொச்சி செல்லும் விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு கோவைக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இரவு 10.35 மணிக்கும், இரவு 8.50 மணிக்கு ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய விமானம் இரவு 9.50 மணிக்கும், இரவு 9.10 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய விமானம் இரவு 11.10 மணிக்கும், இரவு 9.10 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் இரவு 10.30 மணிக்கும், இரவு 10.20 மணிக்கு கொச்சி செல்ல வேண்டிய விமானம் இரவு 11.40 மணிக்கும், இரவு 9.40 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் இரவு 10.50 மணிக்கும் புறப்பட்டுச் சென்றன. இதுபோல, சென்னை விமான நிலையத்தில் 17க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரம் வரை தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர். மோசமான வானிலை நிலவுவதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன என்றனர்.
+
Advertisement

