சென்னை மாநகராட்சியில் உள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு 1,000 குடியிருப்புகள் ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்
சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தூய்மைப்பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் 1000 தூய்மைப்பணியாளர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகள், பணியின்போது உயிரிழந்த 2 தூய்மைப்பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி, தூய்மைப்பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு மானியத்துடன் கடனுதவி,
தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 1,260 மாணவர்களுக்கு அனைத்து விதமான கல்வி கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்காக 2.82 கோடி ரூபாய்க்கான உதவிகள், தூய்மைப்பணியாளர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களின் கீழ், 1,000 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் உதவித்தொகைக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வீட்டு கழிவுகளை அகற்றும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் முதற்கட்டமாக கார்கில் நகர் திட்டப்பகுதியில் 510 குடியிருப்புகளும், பெரும்பாக்கம் பகுதி-3 திட்டப்பகுதியில் 490 குடியிருப்புகளும் என மொத்தம் 1,000 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
தூய்மை பணியாளர்களின் குழந்தைகளில் 1,260 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர திட்டங்களின்படி வழங்கப்பட்டு வரும் கல்வி உதவி தொகையுடன் கூடுதலாக புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், அவர்கள் எந்த பள்ளியில் பயின்றாலும் அவர்கள் உயர்கல்வி பயிலும்பொழுது அவர்களுக்கு அனைத்து விதமான கல்வி கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்காக ரூ.2.82 கோடி நலத்திட்ட உதவிக்கான ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
சென்னை மாநகராட்சியில் நிரந்தர மற்றும் சுயஉதவிக்குழு தூய்மை பணியாளர்கள், மலேரியா தொழிலாளர்கள் என மொத்தம் 31,373 பணியாளர்களுக்கு நாள்தோறும் வெப்பம் தாங்கும் பைகளில் சிற்றுண்டி தாங்கி பெட்டிகள் மூலம் சுகாதாரமான உணவு வழங்கப்படும்.


