படித்த பள்ளியின் பெயரில் மாணவனுக்கு சான்றிதழ் கோரி வழக்கு பள்ளிக்கல்வி துறை விசாரித்து முடிவெடுக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் பெயரில் மதிப்பெண் பட்டியல் மற்றும் டி.சி. வழங்காததை எதிர்த்த மனு குறித்து 12 வாரங்களில் உரிய விசாரணை நடத்தி முடிக்க வேண்டுமென்று பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் சிங்காரப்பு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது மகன் அப்பகுதி மிண்ட் சாலையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்த நிலையில், அவனுக்கு வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழில், ஹிந்து தியோலஜிகல் உயர் நிலைப் பள்ளி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நற்பெயர்பெற்ற மகரிஷி வித்யா மந்திர் பள்ளி என்பதால் 8ம் வகுப்பில் சேர்த்து, 12ம் வகுப்பு வரை அனைத்து கல்வி கட்டணங்களும், கட்டிட நிதி ரூ.20000 சேர்த்து சேர்த்து, இதுவரை ரூ. 2,07,711 செலுத்தியுள்ள நிலையில், மகரிஷி வித்யா மந்திர் பெயரில் மாற்றுச் சான்று மற்றும் மதிப்பெண் சான்று கொடுக்கப்படவில்லை. பொதுத் தேர்வெழுதுவதற்கான ஹால் டிக்கெட் பெறுவதிலும் மகரிஷி பள்ளியும், ஹிந்து தியோலஜிகல் பள்ளியும் சேர்ந்து பள்ளிக்கல்வித் துறையை மோசடி செய்துள்ளது. எனவே, இது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வி துறை, மாவட்ட கல்வி அதிகாரி, ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.முத்தரசு, பள்ளிக் கல்வித் துறையிடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவும் 5 ஆண்டுகளில் செலுத்திய மொத்த தொகையை வழங்கிடவும் உத்தரவிட வேண்டுமென்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் 12 வாரங்களில் உரிய விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.