சென்னை; தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைகையில்; நேற்று தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 0830 மணி அளவில் வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் அடுத்த இரு தினங்களில் கடந்து செல்லக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.16ம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 16ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இன்று முதல் 16ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.