கெங்கவல்லி: சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த தெடாவூர் பள்ளக்காடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 17 வயது மகள், தந்தை வேலை செய்து வரும் தோட்டத்திலேயே தங்கி, விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். அந்த சிறுமி, அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்துள்ளார். இந்த காதல் பெற்றோருக்கு தெரியவந்ததால் சிறுமியை கண்டித்ததுடன், அவசரம், அவசரமாக தோட்டத்து உரிமையாளரின் மகனான டிரைவர் முத்துக்குமாருக்கு, கடந்த 4 மாதத்திற்கு முன்பு, சிறுமியை கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில், நேற்று முத்துக்குமாரின் அக்கா சத்யா, தம்பியையும், அவரது மனைவியையும் தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைப்பதற்கு வந்தார். அப்போது, வீடு உள்ளே பூட்டப்பட்டு இருந்தது. வெகு நேரமாக தட்டியும் திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த சத்யா, அக்கம் பக்கத்தினரை அழைத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிறுமி, சேலையால் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

