Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அழகுபடுத்தும் பணிகள் ஆய்வு பழமையான பூங்காவில் பசுமையை அதிகரிக்க அதிக மரங்கள் நட வேண்டும்

*சித்தூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சித்தூர் : முனுசாமி நாயுடு மாநகராட்சி பூங்காவில் பசுமையை அதிகரிக்க அதிகளவில் மரங்கள் நட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணையர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

சித்தூர் மாநகரத்தில் மிட்டூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த முனுசாமி நாயுடு மாநகராட்சி பூங்கா செயல்பட்டு வந்தது. இந்த பூங்காவில் சங்கு எனப்படும் ஒலிபெருக்கி ஆங்கிலேயர் காலத்தில் இருந்து செயல்பட்டு வந்தது. இதனால் முந்தைய காலத்தில் சித்தூர் மாநகரத்தில் சர்க்கரை ஆலை, பால் பண்ணை, சாக்லேட் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சங்கு ஒலிபெருக்கி மூலம் நேரம் கணக்கெடுத்து பணிக்கு சென்று வந்தனர்.

ஆனால் சில ஆண்டுகளாக முனுசாமி நாயுடு பூங்காவில் உள்ள சங்கு எனப்படும் ஒலிபெருக்கி பழுதடைந்தது. இதனால் சித்தூர் மாநகர மக்களுக்கு நேரம் தெரிந்து கொள்ள முடியாத அவல

நிலை ஏற்பட்டது. அதேபோல் முனுசாமி நாயுடு பூங்கா பராமரிப்பு இன்றி கேட்பாரற்று மூடப்பட்டது.இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் அருணா பராமரிப்பு இன்றி சித்தூர் மாநகரத்தின் மையப் பகுதியில் சித்தூர்- வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள முனுசாமி நாயுடு பூங்காவை பார்வையிட்டு, சிறந்த பூங்காவாக மாற்றி அமைக்கவும் அதேபோல் ஒலிபெருக்கி எனப்படும் சங்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒலி எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவு பிறப்பித்தார். அதற்காக பூங்காவை அழுகுபடுத்தும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மாநகராட்சி அதிகாரிகள் செய்து வந்தனர். தற்போது ஒரு வாரமாக நாள்தோறும் காலை, மதியம், மாலை, இரவு என சங்கு மூலம் நேரம் ஒலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று பூங்காவை மாநகராட்சி ஆணையர் அருணா அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: முனுசாமி நாயுடு பூங்காவை அழகுபடுத்தும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளது. பூங்காவில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினேன். பூங்காவில் பசுமையை அதிகரிக்க, அதிகளவில் மரங்கள் நடவும், பாதசாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொறியியல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பூங்காவில் வெளிச்சத்தின் திறனை அதிகரிக்க அதிக திறன் கொண்ட விளக்குகளை நிறுவ வேண்டும். பூங்காவில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மீதமுள்ள பொம்மைகளை விரைவில் நிறுவ ஏற்பாடு செய்ய வேண்டும். வர்ணம் பூசும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆய்வின் போது டிஇ.க்கள் வெங்கடபிரசாத், ரமணா, ஏ.இ.க்கள் லோகேஷ், ரவீந்திரன் மற்றும் வார்டு செயலாளர்கள் பங்கேற்றனர்.