விடுபட்ட அனைத்து மகளிருக்கும் டிச.15ம் தேதி முதல் ரூ.1,000: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: விடுபட்ட அனைத்து மகளிருக்கும் வருகிற டிசம்பர் 15ம் தேதி முதல் மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் வந்து சேரும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.333.26 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.137.38 கோடி மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு ரூ.1000.34 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:இன்றைக்கு இந்நிகழ்ச்சியில் மட்டும் சுமார் 37 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை கொடுக்க இருக்கிறோம். இது மிகப்பெரிய ஒரு சாதனை, மகிழ்ச்சியான தருணம். விளையாட்டுத்துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் தலா ரூ.3 கோடி மதிப்பிலான மினி ஸ்டேடியம் அமைக்க அடிக்கல் நாட்டி இருக்கிறோம். மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகளுக்கு அடையாள அட்டையும் கொடுத்துள்ளோம்.
இன்றைக்கு இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது. மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் வங்கி கடன் இணைப்புகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் முதல்வர் உரிமைத் தொகையாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். வருகிற டிசம்பர் 15ம் தேதி முதல் விடுபட்டுள்ள சில மகளிருக்கும் நிச்சயம் அந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்திருக்கிறேன். விடுபட்ட அனைத்து மகளிருக்கும் வருகிற டிசம்பர் 15ம் தேதி முதல் மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிச்சயம் வந்து சேரும்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், எம்பி சசிகாந்த் செந்தில், எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜே.கோவிந்தராஜன், க.கணபதி, துரை சந்திரசேகரன், கலெக்டர் பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், சார் ஆட்சியர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
24 மணி நேரத்தில் வீடு ஒதுக்கீடு
சமீபத்தில், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற ஒரு நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பிரேமா என்ற ஒரு மாணவி பேசினார். மழை பெய்தால் ஒழுகுகிற பழைய வீட்டில் இருப்பதாக, அந்த மாணவி தன்னுடைய கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்தார். பிரேமா என்ற மாணவி பேசிய அடுத்த 24 மணி நேரத்தில் அந்த மாணவியின் குடும்பத்திற்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு ஒதுக்கி முதலமைச்சர் அந்த மேடையிலேயே உத்தரவிட்டார். பேப்பரில் உத்தரவு போட்டதுடன் நிற்கவில்லை. அவர்களுடைய ஊருக்கே சென்று, வீடு கட்டுகின்ற அந்த பணியை ஆய்வு செய்து, அந்த மாணவி குடும்பத்தாரிடம் வீட்டை கொடுத்து வாழ்த்தினார் முதல்வர். சென்ற மாதம் வீடு இல்லை என்று சொன்ன ஒரு மாணவி, இந்த மாதம் தன் கண் முன்னால் தன்னுடைய வீடு கட்டப்பட்டுவதை பார்த்து இன்றைக்கு மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று துணை முதல்வர் பெருமிதத்துடன் கூறினார்.



