Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் நெல்லை எஸ்பி ஆய்வு

*பாதுகாப்பு வசதி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

விகேபுரம் : ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வருகிற ஆக.2,3,4,5,6 ஆகிய தேதிகளில் கோயிலில் தங்கி வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்துடன் குடில் அமைத்து தங்கி பூக்குழி இறங்குதல், கிடா வெட்டுதல் என பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபாடு செய்வார்கள். விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம், வனத்துறை, விகேபுரம் நகராட்சி, மற்றும் கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், மின் விளக்கு, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்ேவறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பக்தர்களின் வாகனங்கள் வருகிற 2ம் தேதி முதல் கோயிலுக்கு அனுமதிக்கப்படவிருக்கிறது. எனவே அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் ஆய்வு செய்தார். அப்போது வாகனங்கள் வந்து செல்லுமிடம், மின் விளக்கு வசதி, குடில் அமைப்பது, உணவு, குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பு வசதி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது அம்பாசமுத்திரம் டிஎஸ்பி சதீஷ் குமார், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், முண்டந்துறை சரகர் கல்யாணி, சொரிமுத்து அய்யனார் கோயில் நிர்வாக அதிகாரி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.