Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடி அமாவாசை முன்னோர் வழிபாடு திருமூர்த்தி மலையில் 50 ஆயிரம் பேர் குவிந்தனர்

உடுமலை : திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது திருமூர்த்தி மலை. இங்கு பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஒருங்கே அமையப்பெற்ற இக்கோவிலில் மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், செவ்வாய் , வெள்ளிக்கிழமைகளில் மடத்துக்குளம் உடுமலை, பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதி மக்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கேற்ப உடுமலை,மடத்துக்குளம் சுற்றுவட்டார விவசாயிகள் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தன்று விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும் தங்களது கால்நடைகளை அழைத்துக் கொண்டு திருமூர்த்தி மலை வருகின்றனர். நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் கணியூர், காரத் தொழுவு, மடத்துக்குளம், துங்காவி, பெதப்பம்பட்டி, அணிகடவு, ராமச்சந்திராபுரம், கொழுமம் , சாமராயபட்டி ,எரிசனம்பட்டி,தேவனூர் புதூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு அணி,அணியாக மாட்டு வண்டிகளில் விவசாயிகள் வந்தனர்.

அணியின் கரையோரம் தங்களது மாட்டு வண்டிகளை நிறுத்திவிட்டு இந்த ஆண்டு சாகுபடி செய்யும் விளை பொருட்கள் நல்ல மகசூலை கொடுக்க வேண்டுமென அமண லிங்கேஸ்வரர் கோவிலில் வேண்டினர்.நேற்று ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி முன்னோர் வழிபாடு செய்திடவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வந்தனர். அவர்கள் தோணியாறு,பாலாற்றில், குளித்ததோடு அமணலிங்கேஸ்வரியில் உள்ள சிவன், பிரம்மா, விஷ்ணு ,விநாயகர், முருகர் மற்றும் கனிமார் சன்னதிகளில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பலர் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையா நதியின் கரைகளில் அமர்ந்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.இதே போல அமராவதி ஆற்றின் கரைகளிலும், கொழுமத்திலும், திருமூர்த்தி அணை கரையோரங்களிலும் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய நீத்தார் கடன், திதி, தர்ப்பணம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் கொடுப்பதற்காக குவிந்தனர். அமண லிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசையை ஒட்டி சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

பக்தர்கள் அனைவருக்கும் அறங்காவலர் குழு தலைவர் மொடக்குப்பட்டி ரவி மற்றும் உறுப்பினர்கள் சார்பில் அன்னதானம், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தளி போலீசார் மேற்கொண்டிருந்தனர். பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலையிலிருந்து திருமூர்த்தி மலைக்கு நேற்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.பஸ்,கார், வேன், இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் குவிந்ததால் திருமூர்த்தி மலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு திருமூர்த்தி மலையில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் குவிந்ததால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பஞ்சலிங்க அருவியில் தடை நீங்கியது

கடந்த வாரம் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயனணிகளுக்கான தடை நீக்கப்பட்டது. ஆடிப்பெருக்கு, மற்றும் ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி திருமூர்த்தி மலை வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவியில் குளிப்பதற்கான தடை நீங்கியதால் நீண்ட நேரம் குளியல் போட்டு மகிழ்ந்தனர். நேற்று காலை முதல் மாலை வரை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என திருமூர்த்தி மலையில் மீது எறும்பு ஊர்ந்து செல்வதை போல் நீண்ட வரிசையில் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்து மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் சாமி தரிசனம் செய்தனர்.