* அமைச்சர்கள், கலெக்டர் தொடங்கி வைத்தனர்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 7 புதிய பேருந்து சேவைகளை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.பின்னர், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழகத்தின் முன்னோடித் திட்டமான, நகரப் பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, புதிய பேருந்து புதுக்கோட்டை முதல் ராங்கியம் வரையிலும், புதுக்கோட்டை முதல் விராச்சிலை வரையிலும், ஆலங்குடி முதல் புதுக்கோட்டை வரையிலும், அறந்தாங்கி முதல் கொத்தமங்கலம் வரையிலும், கந்தர்வக்கோட்டை முதல் புதுக்கோட்டை வரையிலும், கீரனுர் முதல் கொப்பம்பட்டி வரையிலும், கீரனுர் முதல் செங்கிப்பட்டி வரையிலும் என மொத்தம் 7 புதிய பேருந்து சேவைகள் நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் இத்தகைய புதிய பேருந்து சேவைகளை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது;தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், அன்றாட வாழ்க்கைச் சுமைகளை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தமிழகமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் தினசரி பயணத்தை கருத்தில் கொண்டு 7 புதிய பேருந்து சேவைகள் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்களில் இயக்கப்படும் இந்தப் பேருந்துகள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளை இணைத்து, மாணவர்கள், தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயண வசதியை மேலும் மேம்படுத்திடும் வகையில் அமைந்துள்ளது உள்ளது.
இந்த புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டதன் மூலம் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, மலிவான மற்றும் நம்பகமான போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்தி மக்கள் நலனில் தொடர்ந்து செயல்பட்டு வருவது, தமிழகத்தின் வளர்ச்சி பாதையில் மேலும் ஒரு முக்கியமான சாதனையாகும்.
எனவே, பொது மக்களின் வசதிக்கேற்ப இயக்கப்படும் இந்த பேருந்து சேவைகள் சரியான முறையில் இயங்கிடும் வகையில் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா (புதுக்கோட்டை), சின்னத்துரை (கந்தர்வக்கோட்டை), மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி, பொது மேலாளர் முகமதுநாசர், துணை மேலாளர் ஜேசுராஜ்,, மற்றும் பாலு, ராஜேஷ், நைனா முகமது, ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


