Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகர்கோவில் சென்னை இடையே தினசரி வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது எப்போது?.. பிரதமர் மோடி வருகைக்காக காத்திருப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் - சென்னை இடையே தினசரி வந்தே பாரத் ரயில் சேவை எப்போது தொடங்கும்? என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே திருநெல்வேலி - சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, கோவை - பெங்களூரு இடையே வந்ேத பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. கட்டணம் அதிகமாக இருந்தாலும் கூட, விரைவு பயணம் என்பதை பயணிகள் விரும்புகிறார்கள். இது தவிர நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து, அதிகம் பேர் நாள்தோறும் சென்னைக்கு பயணிப்பதால் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே தினசரி வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி, சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை தள்ளி வைக்கப்பட்டது. இதனால் தினசரி வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட வில்லை. இந்த நிலையில் சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை தினசரி இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் கடந்த ஜூன் இறுதியில் நடந்தது. சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 4.45 க்கு புறப்பட்ட இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி சந்திப்பு வழியாக பகல் 1.45க்கு நாகர்கோவில் சந்திப்பை வந்தடைந்தது. பின்னர் மதியம் 2.20க்கு மீண்டும் புறப்பட்டு சென்றது. சுமார் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இந்த ரயிலில் மொத்தம் இன்ஜினுடன் சேர்த்து 8 பெட்டிகள் இருந்தன. வாராந்திர ரயிலாக வந்தே பாரத் இருந்த போது, வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் இருந்தது. சோதனை ஓட்ட வந்தே பாரத் ரயிலில் காவி வண்ணத்தில் ரயில் பெட்டிகள் இருந்தன. காலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, தாம்பரத்துக்கு 5.23க்கு வந்து சேரும். தாம்பரத்தில் இருந்து 5.25க்கு புறப்பட்டு 6.52க்கு, விழுப்புரம் வந்தடையும். விழுப்புரத்தில் இருந்து 6.55க்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 8.55க்கு வந்தடையும். திருச்சியில் இருந்து 9 மணிக்கு புறப்பட்டு காலை 9.53க்கு திண்டுக்கல் வந்தடையும். திண்டுக்கல்லில் இருந்து காலை 9.55க்கு புறப்பட்டு மதுரைக்கு 10.38க்கு வந்தடையும். மதுரையில் இருந்து காலை 10.40க்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு பகல் 12.30க்கு வந்தடையும்.

திருநெல்வேலியில் இருந்து பகல் 12.32க்கு புறப்பட்டு பகல் 1.50க்கு நாகர்கோவில் சந்திப்பு வந்ததடையும். மறு மார்க்கத்தில் பகல் 2.20க்கு, நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்பட்டு, திருநெல்வேலிக்கு மாலை 3.18, மதுரைக்கு மாலை 5.03, திண்டுக்கல்லுக்கு மாலை 5.48, திருச்சிக்கு 6.55, விழுப்புரத்துக்கு இரவு 9.03, சென்னைக்கு இரவு 10.33க்கு தாம்பரம், 11.15க்கு சென்னை எழும்பூரை சென்றடையும் வகையில் பயணிக்கும். இந்த பயண நேரம் முறையான அறிவிப்பு வரும் என்றும் கூறி இருந்தனர். சோதனை ஓட்டம் திருப்திகரமாக இருந்தால், விரைவில் நாகர்கோவில் - சென்னை தினசரி வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ரயில் இயக்கப்பட வில்ைல. சுதந்திர தின விழாவுக்கு இது தொடர்பான அறிவிப்பு வந்து விடும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனாலும் அறிவிப்பு வர வில்லை. பிரதமர் வருகை தொடர்பாக தேதி இன்னும் இறுதி செய்யப்பட வில்லை. ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் பிரதமர் தமிழகம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே செப்டம்பரில் வந்தே பாரத் இயங்குமா? என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து விழாக்கள் வர உள்ளன. எனவே இதை கருத்தில் கொண்டு மிக விரைவில் நாகர்கோவில் - சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.