சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’’ என்ற உயரிய லட்சியத்துடன் கோவையில் கடந்த ஜூலை 7ம் தேதி எனது எழுச்சி பயணத்தை தொடங்கினேன். இதுவரை 21 நாட்களில், 14 மாவட்டங்கள், 61 சட்டமன்றத் தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன். 25 லட்சம் மக்களை பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். இந்த பயணத்தில் சுமார் 42 மணி நேரத்திற்கும் மேலாக மக்களிடம் உரையாற்றியுள்ளேன்.
அதேபோல், வெற்றிகரமாக 3,200 கி.மீ. தூரம் பயணித்துள்ளேன். எனது எழுச்சி பயணத்திற்கு, செல்லும் இடமெல்லாம் மக்கள் அளித்துவரும் பேராதரவிலும், அவர்களின் அளவற்ற அன்பிலும் மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். தமிழக மக்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் தேவைகளை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்யும் அதிமுகவின் நல்லாட்சி அமையும். தமிழக மக்கள் ஏற்றம் பெறுவர், அவர்கள் வாழ்வு உயரும். அதுவரை நான் ஓயப்போவதில்லை. எனது எழுச்சிப்பயணம் தொடரும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.