சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை உருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது வருத்தமளிக்கிறது. அந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டு இருக்க கூடாது. மீண்டும் அவரை கூட்டணிக்குள் கொண்டு வர டெல்லியில் உள்ள பாஜ தலைவர்கள் முயற்சிக்க வேண்டும். அவரும் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். நான் தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறேன். அதேபோல, டெல்லியில் உள்ள தலைவர்களுக்கும் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
அதிமுகவில் அமைச்சராக இருந்த பலர் திமுகவிற்கு சென்று உள்ளனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்து உள்ளார். எனவே அதுபோன்ற முடிவை அவர் எடுக்கமாட்டார். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அமித்ஷா தெரிவித்த பிறகு அதனை கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அதற்கு ஏற்றவாறு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.