Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தமிழ்நாட்டில் நடைபெற்றால் பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து விடுபடும் ஆபத்து : தமிழக தேர்தல் அதிகாரிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கடிதம்

சென்னை: தமிழக தேர்தல் அதிகாரிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் எழுதியுள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல்களையொட்டி ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி என்பது இந்த ஆண்டும் வழக்கம் போல சுருக்க முறை திருத்தமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செய்திகளில் வரும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அதன்படி, தமிழகத்திலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேற்கொள்ள முன்னேற்பாடுகளை தொடங்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதற்கான பணிகளை துவங்கியுள்ளதாகவும், அதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம்.

பீகாரில் நடந்து வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் தங்களது இந்திய குடியுரிமைக்கான சான்றிதழ்களை சமர்ப்பித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் இணைக்கப்படும் என்று வற்புறுத்தி பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி விடுவார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்தச் சூழலில், அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான முறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுடைய கூட்டத்தை நடத்தி அவர்களுடைய ஆலோசனை பெற்று அதனடிப்படையில் வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணியை நடத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கோருகிறது.

அவசரகதியில் பீகாரில் நடைபெற்று வருவது போன்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தமிழ்நாட்டில் நடைபெற்றால் பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து விடுபட்டு போய்விடும் ஆபத்து உள்ளது. எனவே, தலைமை தேர்தல் அதிகாரி அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். இந்த கூட்டம் நடைபெற்று முடிவுகள் எடுக்கப்படும் வரை மேல்நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.