ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ கடைசி பேச்சு
சென்னை: வைகோவின் எம்.பி. பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. இதனால் நேற்று நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தின்போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து எழுப்பினர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது வைகோ, இறுதிநாளான இன்று தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனால் அவர் பேச மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடு்தது வைகோ பேசியதாவது:
தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பறிக்கும் வகையில், இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்து, கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ பேசினார். வைகோ பேசி முடித்த பிறகு மாநிலங்களவையில் மீண்டும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.