Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஈரோட்டில் 18ம் தேதி தவெக பொதுக்கூட்டம்: அறநிலையத்துறை தடை செய்த இடத்தை தேர்வு செய்த செங்கோட்டையன்; விஜய் பிரசாரத்துக்கு அனுமதி பெறுவதில் சிக்கல்; தொண்டர்கள் அதிர்ச்சி

ஈரோடு: ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை தடை செய்த இடத்தை தவெகவினர் தேர்வு செய்துள்ளதால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. செங்கோட்டையனின் இந்த நடவடிக்கையால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் வருகின்ற 16ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச்செயலாளருமான செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் அனுமதி கேட்டு ஈரோடு கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் கடந்த 9ம் தேதி மனு அளித்திருந்தனர்.

கரூர் சம்பவத்தையடுத்து அரசியல் கட்சியினர் பிரசார கூட்டங்களுக்கு கோர்ட் உத்தரவுப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மாவட்ட காவல்துறை நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. போலீஸ் விதித்துள்ள நிபந்தனைகள் படி பிரசார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் இதற்கான கால அவகாசம் தேவைப்படுவதால் 18ம் தேதி பிரசார கூட்டம் நடைபெறும் என்றும் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெகவினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருக்கும் இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடமாக இருப்பதால் பிரசார கூட்டம் நடத்துவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, விஜயமங்கலம் சரளை பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த 19 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தை தவெகவினர் தேர்வு செய்துள்ளனர். இந்த நிலம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் பரப்பளவில் ஒரு பகுதியாகும். குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பரம்பரையாக இந்த கோயில் நிலத்தை அனுபவித்து வருகின்றனர். அந்த இடத்தை தவெகவினரோ அல்லது மற்ற அரசியல் கட்சிகளோ, பொதுக்கூட்டங்களோ, அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளோ நடத்த அனுமதி வழங்க கூடாது என்று மாவட்ட நிர்வாகத்திற்கு, இந்து சமய அறநிலையத்துறை கடிதம் அனுப்பியிருக்கிறது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணையாளர் பரஞ்ஜோதி கூறியதாவது: விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக 31 ஏக்கர் நிலம் அரசு ஆவணங்களின் படி, அறநிலையத்துறைக்கு சொந்தமானது. சம்பந்தப்பட்ட நிலத்தை நீண்ட காலமாக, அப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியான 19 ஏக்கர் பரப்பளவில் தவெகவினர் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி மனு அளித்திருக்கின்றனர்.

இதற்கான அனுமதியை இந்து சமய அறநிலையத்துறையிடம் தவெக பெறாத நிலையில், அங்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட காவல்துறைக்கும் அறநிலையத்துறை தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், பொதுக்கூட்டம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தவெகவினரின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையனின் இந்த இடத்தேர்வால் விஜய் கூட்டத்திற்கு எழுந்துள்ள சிக்கல், தவெகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* பிரசார ரூட் கிங் செங்ஸ்க்கு சறுக்கல்

ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் போது அதற்கான ரூட் மேப் போட்டு கொடுத்து பிரசாரத்திற்கு அழைத்து செல்வதில் செங்கோட்டையன் கைதேர்ந்தவர். இதற்காக செங்கோட்டையனை ‘பிரசார ரூட் மேப் கிங்’ என்று அந்த காலகட்டத்தில் அழைத்து வந்தனர். இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் நடிகர் விஜய் எங்கும் பிரசார கூட்டத்திற்கு செல்லாமல் இருந்து வந்தார். செங்கோட்டையன் பிரசார ரூட் கிங் என்று மற்றவர்கள் கூறியதை நம்பி கரூர் சம்பவத்திற்கு பிறகு முதன்முதலாக ஈரோட்டில் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள விஜய் சம்மதித்தார். ஆனால் அரசியல் கட்சிகள் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு அரசுக்கு சொந்தமான இடங்களை தேர்வு செய்ய தடை உள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை செங்கோட்டையன் தேர்வு செய்திருப்பதும், அதனால் தற்போது பிரசார கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதும் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* இடம், தேதியிலும் சொதப்பல்

விஜய் பிரசார கூட்டம் முதலில் ஈரோடு அடுத்த பவளத்தாம் பாளையம் என்ற இடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குறுகிய இடம் என்பதால் வேறு இடம் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டு பெருந்துறை விஜயமங்கலத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 16ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 2 நாட்கள் கழித்து 18ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படி அடுத்தடுத்த செங்கோட்டையனின் சறுக்கல்கள் தவெகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

* ஜெயலலிதாவுக்கு பதிலாக புஸ்ஸி படத்துடன் போஸ்டர்: செங்கோட்டையனுக்கு பாடம் எடுத்த தவெக

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை தொடர்ந்து அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும் செங்கோட்டையன் தொடர்ந்து அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்களை பயன்படுத்தி வருகின்றார். அவரது சட்டை பாக்கெட்டில் விஜய்க்கு பதிலாக ஜெயலலிதா படம் தான் உள்ளது. இதே போல தவெக கட்சி கரை வேட்டி, துண்டு ஆகியவற்றை பயன்படுத்துவதை செங்கோட்டையன் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் கோபி நகரின் பல்வேறு பகுதிகளில் தவெக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் சூழ்ச்சி வீழும். சுயநலம் சாயும்.. வெற்றி நமதே போன்ற பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. போஸ்டரில் எம்.ஜி.ஆர், அண்ணா, விஜய், புஸ்சி ஆனந்த் ஆகியோர் படங்களுடன் செங்கோட்டையன் படமும் இடம் பெற்று உள்ளது. ஆனால் ஜெயலலிதாவின் படம் போஸ்டரில் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக புஸ்ஸி ஆனந்த் படம் பெரிய அளவில் போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா படம் இல்லாமல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் செங்கோட்டையன் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். செங்கோட்டையனுக்கு பாடம் புகட்டவே இந்த போஸ்டர் என்றும், எடப்பாடியை மறைமுகமாக கண்டிப்பதற்காக என்றும், ‘எப்படி இருந்த செங்ஸ் இன்றைக்கு போஸ்டர் ஒட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டாரே’ என்றும் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.