திருச்சி: ‘வெளிமாநில வாக்காளர்களை சேர்க்கவே எஸ்.ஐ.ஆர் பணி’ என்று வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் வரும் ஜனவரி 2ம்தேதி சனாதன சக்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்தும், போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் சமத்துவ நடைபயணத்தை மதிமுக பொது செயலாளர் வைகோ துவக்குகிறார். இதையொட்டி திருச்சியில் நடைபயணத்தில் பங்கேற்கும் மதிமுக தொண்டர்களை வைகோ நேற்று தேர்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: நடைபயணங்களில் நான் அரசியல் கட்சிகளை விமர்சித்தது கிடையாது. ஆனால் ஜனவரி 2ம்தேதி திருச்சியில் துவங்கவுள்ள நடைபயணத்தில் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு திராவிட மாடல் ஆட்சி தொடர ஆதரவு தர வேண்டுமென பொதுமக்களிடம் வேண்டுகோள் வைக்கவுள்ளேன். அரசு தன் இரும்புக்கரம் கொண்டு போதைப்பொருளை ஒழிக்க வேண்டும்.
எஸ்ஐஆர் என்பது மிகப்பெரிய மோசடி. இருக்கும் வாக்காளர்களை நீக்கி விட்டு வெளிமாநில வாக்காளர்களை சேர்க்கவே இந்த ஏற்பாடு. எஸ்ஐஆருக்கு எதிராக நாங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வரும் வெள்ளி அல்லது திங்கட்கிழமை வாதாட எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போது எங்களது வாதத்தை முன் வைப்போம். என் பாட்டனார் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துகளை பொது வாழ்வுக்கு வந்த பின் இழந்தேன். அதை இழப்பாக நான் கருதவில்லை. இவ்வாறு வைகோ கூறினார்.
* ‘நரி ஊளையிட்டால் பதில் கூற முடியாது’
‘என் நாணயம் குறித்து எதிர்க்கட்சிகள் கூட வைக்காத குற்றச்சாட்டை மல்லை சத்யா வைத்துள்ளார். நான் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கிறேன். அந்த பயணத்தில் நரி ஊளையிட்டால் அதற்கு நின்று பதில் கூற முடியாது’ என்று வைகோ தெரிவித்தார்.


