Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அப்போது செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார் ஓபிஎஸ் கரூர் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தை விஜய் செய்கிறார்: மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் வைகோ பேச்சு

சென்னை: மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமை வகித்தார். இதில், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.ராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், சென்னைக்கு அழைத்து வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்த விஜய், யாரும் செய்யாத பித்தலாட்டத்தைச் செய்துள்ளார். விஜய்க்கு குற்ற உணர்ச்சியே இல்லை. பொதுக் குழுவில் முதல்வரை தாக்கி விஜய் பேசியது பொறுப்பற்ற பேச்சு. 2011-ல் செய்த தவறுக்காக இப்போது ஓ.பன்னீர்செல்வம் அனுபவிக்கிறார். கூட்டணியில் மதிமுக தொடர்வதா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது, அதிமுகவில் இருந்து அதன் பொதுச்செயலாளர் அனுப்பிவைத்த குழுவில் செங்கோட்டையன், ஜெயக்குமார், தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் இருந்தனர். அவர்களிடம் கடைசியாக எவ்வளவு சீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். 12 சீட் தான் என்றார்கள்.

இதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது, இதைவிட அதிகமான சீட்களை கொடுக்க உங்கள் பொதுச்செயலாளர் ஒப்புக்கொண்டால், கூட்டணியை உறுதிப்படுத்திவிடலாம் என்றேன். அதையே செய்கிறோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார் ஓ.பி.எஸ். ஆனால், அதிமுக பொதுச்செயலாளரிடம் சென்று ‘அவர் நம் கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை’ என்று பொய்யை சொல்லிவிட்டார். ஜெயலலிதா 15 தொகுதி ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர் தான் எனக்கு தெரியவந்தது. அதன் பலனை இன்று ஓபிஎஸ் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதி இது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.