வேறு எந்த கூட்டணிக்கும் செல்லமாட்டோம்; எந்த சூழலிலும் திமுகவுக்கு விசிக துணை நிற்கும்: திருமாவளவன் உறுதி
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடிதிருவாதிரை தொடக்க விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு பேசியதாவது: பூம்புகார் நினைவு சின்னத்தை கலைஞர் உருவாக்கியது போல், கீழடி உள்ளிட்ட தமிழர்களின் பெருமைகளில் தனிக்கவனம் செலுத்தி உலகளவில் கொண்டு செல்லும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் மற்றும் பொன்னேரியில் வளர்ச்சி திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நலம் பெற விசிக சார்பில் வாழ்த்துகிறோம். மாமன்னன் இராசேந்திரசோழ அரசின் புகழைப்போல தற்போது திமுக அரசு புகழை கொண்டுள்ளது. தற்போதைய சூழலுக்கு திராவிட மாடல் அரசு தேவையாய் இருக்கிறது. எனவே, வேறு எந்த கூட்டணிக்கும் விசிக செல்லாது. எந்த சூழ்நிலையிலும் திமுகவிற்கே விசிக என்றும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.