4 கார்களில் மாறிமாறி சென்று கள்ள உறவு வைக்கும் இயக்கம் திமுக கிடையாது: எடப்பாடிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி
சென்னை: நான்கு கார்களில் மாறிமாறிச் சென்று கள்ள உறவை வைத்துக்கொள்ளும் இயக்கம் திமுக கிடையாது என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதி ஓட்டேரி, பட்டாளம், புளியந்தோப்பு, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட உள்ள முதல்வர் படைப்பகத்திற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பெரம்பூர் ஜமாலியா மங்களாபுரம் மற்றும் ஏகாங்கிபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை மேம்படுத்துவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டில் எந்த ஆட்சியிலும் செய்யாத அளவிற்கு இந்த ஆட்சியில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக இருப்பதை மாற்ற முதல்வர் படைப்பகம் என்ற மாபெரும் திட்டத்தை கொளத்தூரில் படைத்து காட்டினார் முதல்வர். இந்த படைப்பகத்தின் மூலம் மாதம் 6000 பேர் உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்கித் தந்ததால் சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
30 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்க திட்டமிட்டு, ரூ.268 கோடி செலவில் இதுவரை 26 முதல்வர் படைப்பகத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்பொழுது துவக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்திற்கான பணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதேபோல், சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 15 முதல்வர் படைப்பகங்கள் உருவாக்குவோம் என்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகளும் தொடங்கப்பட்டால் சென்னையில் மட்டும் 45 முதல்வர் படைப்பகங்கள் சென்னையில் உருவாக்கிய வரலாற்று பெருமைமிக்க முதலமைச்சராக இருப்பார். வடசென்னை பிரகாசம் சாலையில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப்பட உள்ளது.
எங்காவது ஒரு மேடையில் மோடியையும், பாஜவையும் சாடி பேச சொல்லுங்கள் பார்க்கலாம். உரிமைக்கு குரல் கொடுக்கும் இயக்கம் திமுக. உறவுக்கு கை கொடுக்கக்கூடிய இயக்கம் திமுக. தன்மானம் பாதிக்கப்படுகிறது என்றால் அண்ணா சொன்னது போல் கொள்கை என்பது கட்டிய வேட்டி, பதவி என்பது தோளில் போட்ட துண்டு, அந்தப் பதவி என்ற தோலில் போட்ட துண்டை கொள்கைக்காக விட்டெறிந்து செல்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். ஆதரித்தாலும், எதிர்த்தாலும் வெளிப்படையாக ஆதரிக்கிற இயக்கம் திமுக. 4 காரில் மாறி மாறிச் சென்று கள்ள உறவை வைத்துக் கொள்ளும் இயக்கம் திமுக கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், மாநகராட்சி துணை ஆணையர் கவுஷிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.