மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் திராவிட வெற்றிக் கழகம் பெயரில் கட்சி தொடங்கினார் மல்லை சத்யா: 7 நட்சத்திரங்களுடன் கூடிய கொடியும் அறிமுகம்
சென்னை: மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். மேலும், 7 நட்சத்திரங்களுடன் கூடிய கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது. வைகோவின் விசுவாசமிக்க தொண்டனாக 30 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் பயணித்தவர் மல்லை சத்யா. இடையில், மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து, மல்லை சத்யாவை துரோகி என்று கூறிய வைகோ, கடந்த செப்டம்பர் 8ம் தேதி அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக வைகோ அறிவித்தார்.
தனது ஆதரவாளர்களுடன் பலகட்ட ஆலோசனைகளை சத்யா நடத்தினார். இதன்பின் புதியக் கட்சியை தொடங்க உள்ளதாக மல்லை சத்யா அறிவித்தார். இந்நிலையில் புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதற்காக சென்னை அடையாறில் தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மல்லை சத்யாவின் தலைமையில் நடந்த விழாவில் தனது புதிய கட்சியின் பெயரை திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருப்பூர் துரைசாமி அறிவித்தார். அதாவது, ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 7 நட்சத்திரங்களுடன் கூடிய கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது. இக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மல்லை சத்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மல்லை சத்யாவின் திவெக
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை போல் கட்சியின் பெயர் அமைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை சுருக்கமாக தவெக என்று அழைக்கும் நிலையில், இந்த கட்சி சுருக்கமாக திவெக என்று அழைக்கப்படும். ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் நடத்தி வரும் நிலையில், திராவிட வெற்றிக் கழகம் என்று மல்லை சத்யா தொடங்கி இருப்பது தமிழக அரசியல் களத்தில் விவாதமாகி இருக்கிறது.


