மக்களவையில் அனல் தெறிக்கும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று விவாதம்: உளவுத்துறை தோல்வி, டிரம்ப் மத்தியஸ்தம் குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் திட்டம்
புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து 16 மணி நேரம் அனல் தெறிக்கும் விவாதம் நடக்க உள்ளது. இதில், உளவுத்துறையின் தோல்வி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக 26 முறை கூறியது போன்றவை குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. இதில், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் முடங்கின. இதைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்றும், மாநிலங்களவையில் நாளையும் தலா 16 மணி நேரம் விவாதம் நடத்த ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த அனல் தெறிக்கும் விவாதம் மக்களவையில் இன்று நடக்க உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டதாகவும் ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் 100 சதவீதம் வெற்றி பெற்றதாகவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் ஆயுதங்களின் திறன் உலகிற்கு நிரூபிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். மேலும், இந்த நடவடிக்கை மூலம் தீவிரவாதத்திற்கு பதிலளிப்பதில் இந்தியா புதிய அத்தியாயத்தை எழுதியிருப்பதாகவும் மோடி கூறி உள்ளார்.
இந்த கருத்துக்களை முன்வைத்து பேச ஒன்றிய அரசு தரப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் போன்ற முக்கிய தலைவர்கள் இன்றைய விவாதத்தில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்க 30க்கும் மேற்பட்ட உலக தலைநகரங்களுக்கு பயணித்த அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவில் இடம் பெற்ற சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் ஜா, மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஹரிஷ் பாலயோகி உள்ளிட்டோரும் அரசி்ன் நிலைப்பாட்டை அவையில் முன்வைப்பார்கள் என கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக இரு அவைகளிலும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரசின் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடும். குறிப்பாக, ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உளவுத்துறை குறைபாடுகள் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 26 முறை கூறியிருப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி அரசுக்கு நெருக்கடி தர திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இப்போரில் இந்தியா போர் விமானங்களை இழந்ததா, ஏன் திடீரென போர் நிறுத்தம் ஏற்பட்டது, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால் போரை நிறுத்தியதாக இந்தியா கூறும் நிலையில், அதிபர் டிரம்ப் அவர் தான் போரை நிறுத்தியதாக கூறும்போது ஏன் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார் என பல கேள்விகள் எழுப்பப்பட உள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியா சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறவில்லை என்பதும், தேர்தல் ஆதாயத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
இதனால் மக்களவையில் இன்றைய விவாதம் கடுமையான காரசாரத்துடன் நடக்கும் என்பது நிச்சயம். நாட்டின் தேச பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை தொடர்பான விவகாரம் என்பதால் இதில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு இறுதியில் பிரதமர் மோடி பதிலளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவாதத்தில் பிரதமர் மோடி கட்டாயம் பங்கேற்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கெல்லாம் பதில் என்ன?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
- பஹல்காம் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தீவிரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. அவர்கள் 2023 டிசம்பரில் பூஞ்ச் பகுதியிலும், 2024 அக்டோபரில் கங்காகிர் மற்றும் குல்மார்க் பகுதியிலும் நடந்த முந்தைய தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என கூறப்படுகிறது.
- கடந்த மே 30ம் தேதி, முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் சிங்கப்பூரில் அளித்த பேட்டியில், ஆபரேஷன் சிந்தூரின் முதல் 2 நாட்களில் சில தவறுகள் நடந்ததாக வெளிப்படையாக குறிப்பிட்டார். இந்திய ராணுவம் போர் விமானங்களை இழந்ததையும் அவர் ஒப்புக் கொண்டார்.
- கடந்த ஜூன் 29ம் தேதி, இந்தோனேசியாவில் இந்திய ராணுவ அதிகாரி குரூப் கேப்டன் ஷிவ் குமார், ஆபரேஷன் சிந்தூரின் போது அரசியல் தலைமையின் இடையூறு காரணமாக இந்திய ராணுவம் விமானங்களை இழந்ததாக கூறினார். அரசியல் தலைமையின் முடிவால் சில தவறுகள் நடந்ததாகவும் கூறினார்.
- போரின் போது சீனாவின் சைபர் தாக்குதலை எதிர்த்து இந்தியா போராடியதாக லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங் கூறி உள்ளார். இது முற்றிலும் புதிய பிரச்னை.
- பஹல்காம் தாக்குதல்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பாதுகாப்புத் தோல்வி என்று காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக 26 முறை கூறி இருக்கிறார். வர்த்தகத்தை வைத்து மிரட்டி பணிய வைத்ததாகவும், இந்தியா 5 போர் விமானங்களை இழந்ததாகவும் வெளிப்படையாக கூறி வருகிறார். அதே சமயம், எப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அவர் மதிய விருந்து அளித்துள்ளார்.
- ஆபரேஷன் சிந்தூரின் போது சில இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்கள் கேலி செய்வது போல் அமைந்தன. இவ்வாறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.