Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உரிம கட்டணம் குறித்து அவதூறு பிரசாரம் கிராமப்புற சிறு வணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்: எடப்பாடிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி

சென்னை: கிராமப்புற சிறு வணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கிராமப்புறங்களில் சிறுதொழில் மற்றும் வணிகம் செய்ய உரிமக் கட்டணம் என்ற ஒரு சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏதோ புதிதாக கொண்டு வந்தது போல எடப்பாடி பழனிசாமி தனது வழக்கமான அவதூறு பிரசாரத்தை அவிழ்த்துவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் “அபாயகரமானதும் மற்றும் தீங்குவிளைவிக்கும் வர்த்தக உரிமம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது தான் இந்த நடைமுறை.

2011-12ல் 85,649 ஆக இருந்த வணிக உரிமங்களின் எண்ணிக்கை எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் 2020-21ல் 2,05,100 ஆக உயர்ந்தது. அதேபோல் 2011-12ல் ரூ.5.40 கோடியாக இருந்த உரிமக் கட்டணம் இவரது ஆட்சிக் காலத்தில் ரூ.12.90 கோடியாக உயர்ந்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு இன்றைக்கு கிராமப்புற சிறு வணிகர்களுக்காக பரிந்து பேசுவது போல இவர் நாடகம் ஆடுவதைப் பார்த்துப் பொதுமக்கள் ஏமாந்து போக தயாராக இல்லை. இன்றளவிலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு வகையான நிறுவனங்கள் தொழில், வர்த்தக உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஊராட்சிகளுக்கு வரி வருமானம் கிடைத்து வருகிறது.

தொழில் உரிமம் பெறுவதற்கான சட்டப்பிரிவு பல ஆண்டுகளாக இருந்த போதும் முறையான விதிகள் இல்லாததால் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பல்வேறு விதமான கட்டணங்கள் நிர்ணயம் செய்து அதிக அளவில் கட்டணங்களை வசூலித்து வந்தன. இக்குறைகளை நீக்கும் பொருட்டு பல்வேறு வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இப்போது புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஆறாவது மாநில நிதிக்குழு அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தக உரிமம் என வழங்கப்பட்டிருந்த பெயரை ”வணிக உரிமம்” என எளிமைப்படுத்தி மாற்றி வழங்க பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி தற்போது வகுக்கப்பட்டுள்ள விதிகளில், அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தக உரிமம் என்ற பெயரை, ”வணிகம் அல்லது தொழில் உரிம விதிகள்” என மாற்றி சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு 2024ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகம் அல்லது தொழில் உரிமம் பெறுவதற்கான நடைமுறை விதிகள் உருவாக்கப்பட்டு, கடந்த 9ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த புதிய நடைமுறையின்படி, “ஆன்லைனில் வணிக உரிமம் பெறும் நடைமுறை” கொண்டு வரவும், முந்தைய சட்டப் பிரிவின்படி ஒவ்வொரு ஆண்டும் தொழில் உரிமம் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தற்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது என்ற சலுகை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைவிட குறைந்த தொழில் உரிமக் கட்டணம் நிர்ணயம்” “வணிக உரிமம் பெறும் விண்ணப்பம் மீது 30 நாட்களுக்குள் முடிவு எடுக்காவிட்டால் உரிமம் வழங்கப்பட்டதாக கருதப்படும் என்ற சலுகை விண்ணப்பங்களை முறையான விசாரணை - உரிய வாய்ப்பு அளிக்காமல் நிராகரிக்கக்க கூடாது என்ற நிபந்தனை என்ற பல்வேறு நன்மைகள் இந்த புதிய விதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு எப்போதும் எழை எளிய மக்களின் குறிப்பாக வணிகர்களுக்கு துணைநிற்கும் அரசாகும். வணிகர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ள திராவிட மாடல் அரசின் நல்லெண்ணத்தின் மீது பழிபோட பழனிசாமி பகல் கனவு காண வேண்டாம். இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து கோரிக்கை மனு ஒன்றினை நேற்று முதல்வர் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த கோரிக்கை மனுவிலுள்ள விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றினை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தக்குழு, கிராமப்புறங்களில் சிறு வணிகர்கள் வணிக உரிமம் பெறுவது குறித்த நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.