சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகளில் ஒரே சீரான நிலையை உருவாக்குகிறோம் என்ற பெயரில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்று நீட் தேர்வு வேற்றுமை மிகுந்த, ஒழுங்கீனமான, மற்றும் ஏராளமான முறைகேடுகளால் பீடிக்கப்பட்ட தேர்வாக மாறியுள்ளது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து அதன் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படத்தன்மை பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன. நீட் தேர்வில் தகுதி பெற தேவையான மதிப்பெண்கள் பெற்ற 12 லட்சம் மாணவர்கள் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இது நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையை குலைக்கும் நிகழ்வாகும். மருத்துவப் படிப்புகளில் மாநில நிர்வாகத்தால் நடத்தப்படும் முறைமைகளுக்கு திரும்ப வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை வலியுறுத்துகிறோம். பல்வேறு கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து, நீட் தேர்வின் மோசமான பாரபட்சம் குறித்து குரல் கொடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement