Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா - பாக். மோதல்.. டிரம்ப்பின் கூற்றை மறுக்காமல் பிரதமர் மோடி இருப்பது ஏன் : சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

மதுரை : இந்தியா - பாக்.போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் பேச்சு குறித்த கேள்விக்கு அரசு அளித்த பதில் திருப்தியில்லை என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பகல்காம் பிரச்சினையை ஒட்டி தனது தலையீட்டின் பேரில்தான் இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது என்று மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருவது பற்றிய கேள்வியை (எண் 922/25.07.2025) எழுப்பி இருந்தேன். இதே போன்ற கேள்விகளை மொகமது ஜாவீது, அதிகாரி தீபக் தேவ், மாலாராய், டி.எம்.செல்வகணபதி ஆகியோரும் எழுப்பி இருந்தனர். அதற்கு வெளியுறவு அமைச்சர் அளித்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை.

*சு.வெங்கடேசன் கேள்வி*

தனது தலையீட்டின் பேரில்தான் இந்தியா பாகிஸ்தான் ராணுவ மோதல் முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறாரே? வர்த்தகத்தை காட்டி போரை நிறுத்தினேன் என்றும் கூறுகிறாரே! இத்தகைய கூற்றை மறுதலிக்காமல் பிரதமர் இருப்பது ஏன்? அவரின் பங்கு இப் பிரச்சனையில் இருந்ததா? காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயாராக இருக்கிறேன் என்றும் கூறியிருப்பதை மறுத்து மூன்றாம் நபர் தலையீடை இந்தியா ஏற்காது என்று அமெரிக்க அதிபரிடம் தெரிவித்திருக்கிறோமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

*வெளியுறவு அமைச்சர் பதில்*

இந்தியாவும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது என்ற முடிவை இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குனர்களின் நேரடி பேச்சு வார்த்தைகள் அடிப்படையில் மே 10 ஆம் தேதி எடுத்தோம். இதற்கான முன் முயற்சியை பாகிஸ்தான் தரப்புதான் எடுத்தது. மே 8 அன்றே பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாத ஆதார தளங்களை நாம் தகர்த்து நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் இலக்கை எட்டி விட்டோம். ஏப்ரல் 22 முதல் மே 10 வரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் ராஜீய ரீதியான தொடர்புகளை பல மட்டங்களில் மேற்கொண்டோம். நமது தொடர்பாளர்கள் எல்லோருமே நமது அணுகுமுறை இலக்கிடப்பட்டது; அளவு மீறாதது; கூடுதல் பதட்டத்தை உருவாக்காதது என்பதை பொதுவான செய்தியாக தெரிவிக்க வழிகாட்டப்பட்டு இருந்தனர். குறிப்பாக அமெரிக்காவை பொருத்தவரையில் அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இடம், பாகிஸ்தான் பெரிய தாக்குதலுக்கு முனைந்தால் நாங்களும் பொருத்தமான முறையில் பதில் தருவோம் என்பதை மே 9 அன்று தெரிவித்தோம். இது சம்பந்தமான பிரச்சனையில் வர்த்தக அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மூன்றாம் நபர் தலையீடு சம்பந்தப்பட்ட வரையில், பாகிஸ்தான் உடனான நிலுவை பிரச்சனைகள் இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் மூலமாகவே அணுகப்படும் என்பதே நமது நீண்ட நாளைய நிலைபாடு. இந்த நிலைபாடு எல்லா தேசங்களுக்கும் - நமது பிரதமரால் அமெரிக்க அதிபருக்கும் உள்ளிட்டு - தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

*சு.வெங்கடேசன் கருத்து*

"வெளியுறவு அமைச்சரின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை. 75 நாட்களில் 25 முறைகள் டிரம்ப் தனது தலையீட்டியின் பேரில்தான் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது, அதற்கு வர்த்தக நிபந்தனையை பயன்படுத்தினேன் என்று கூறி வந்துள்ளார். இதற்கு இந்திய பிரதமர் வலுவான பதிலை தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பலமுறை வலியுறுத்தியும் பிரதமர் தரப்பில் மௌனமே பதிலாக இருந்துள்ளது. மே 10 அன்று அதிகாரப்பூர்வமாக இந்திய பிரதமர் அறிவிப்பதற்கு முன்பாகவே அமெரிக்க அதிபர் ராணுவ நடவடிக்கை நிறுத்தத்தை அறிவித்தார் என்பது நாடறிந்த விஷயம். இது இந்திய தேசத்தின் இறையாண்மையை கேள்விக்கு ஆளாக்குவதாகும். வெளியுறவு அமைச்சரின் பதிலில் கூட ட்ரம்பின் இந்த கூற்று பற்றி நேரடியாக இந்தியாவின் மறுப்பு அமெரிக்க அதிபரிடமோ அல்லத் அமெரிக்க நிர்வாகத்திடமோ தெரிவிக்கப்பட்டது என்று சொல்லவில்லை. மூன்றாம் நபர் தலையீட்டை பாகிஸ்தான் பிரச்சனையில் ஏற்பதில்லை என்கிற நிலைப்பாட்டை பொதுவாக எல்லா நாடுகளிடமும் சொன்னது போல அமெரிக்காவிடமும் சொன்னோம் என்று தான் இருக்கிறது. மேலும் பாகிஸ்தான் கெஞ்சியதால் போரை நிறுத்தினோம் என்று பொது வெளியில் பிரதமர் பேசினார். ஆனால் இந்த பதிலிலோ அத்தகைய தொனி இல்லை. பாகிஸ்தான் தரப்பில் முன் முயற்சி இருந்தது என்று தணிவான வார்த்தைகளே உள்ளன. ஆகவே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திருப்தி தரக்கூடிய நேரடியான குறிப்பான பதில் இல்லை." என்று சு.வெங்கடேசன் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.