Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜ ஊழல் ஆட்சியை கண்டித்து மாஜி மாநில தலைவர் விலகல்: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஊழல் ஆட்சிதான் நடக்கிறது. தொண்டர்களின் மனதையும் கட்சி பிரதிபலிக்கவில்லை. இதனால் பாஜவில் இருந்து விலகி விட்டேன் என்று முன்னாள் தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். புதுச்சேரியில் பாஜ கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில் அக்கட்சி முன்னாள் தலைவரே ஊழல் ஆட்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில பாஜ தலைவராக சாமிநாதன் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தொடர்ந்து 8 ஆண்டுகள் பதவி வகித்தார். மேலும், 2017 முதல் 2021 வரை நியமன எம்எல்ஏவாகவும் பதவி வகித்துள்ளார்.

அவர் தலைவராக பதவி வகித்த 2021ம் ஆண்டுதான் என்ஆர் காங்., - பாஜக கூட்டணி அமைந்து, சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 2023ல் சாமிநாதனின் பதவி காலம் முடிந்த பிறகு, கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக சாமிநாதன் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், 2026ம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவதாக ஒரு அணியை அமைத்து போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக சுயேட்சை எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்களுடன் ரகசிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், லாஸ்பேட்டை தொகுதியில் களமிறங்கி திட்டமிட்டு தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து மக்கள் பணி செய்து வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தற்போது பாஜ கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக முன்னாள் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பாஜவில் இருந்து இன்று முதல் முழுமையாக விலகிக் கொள்கிறேன். புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன், ஊழலற்ற நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

பாஜவில் இருந்து விலகியது குறித்து சாமிநாதனிடம் கேட்டபோது, புதுச்சேரியில் நேர்மையான மற்றும் ஊழல் இல்லாத அரசை எதிர்பார்த்தேன். அது முடியாமல் போய்விட்டது. நாங்கள் எதற்காக போராடினோமோ அதை நிறைவேற்ற முடியவில்லை. புதுச்சேரியில் புதிய மாற்றத்துக்காக நாங்கள் வந்தோம். அதை எங்களால் செய்ய முடியவில்லை. புதுச்சேரியில் மீண்டும் ஒரு முயற்சி எடுப்பேன். தற்போதுள்ள அரசு மீதான அதிருப்தி காரணமாகதான் பாஜவில் இருந்து விலகுகிறேன். நான் இருக்கும்போது கூறிய பெஸ்ட் புதுச்சேரி உட்பட எதுவும் நடக்கவில்லை. தொண்டர்களின் மனதை கட்சி பிரதிபலிக்கவில்லை. கட்சியிலிருந்து விலகியது குறித்து அடுத்த வாரம் விளக்கமாக கூறுகிறேன் என்றார்.