டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் காங்கிரசுக்கு என்ன ரோல் ராகுல் காந்திக்கு என்ன ரோல்: 2 நாளில் தெரியும்; பொன்.ராதாகிருஷ்ணன் சர்ச்சை
நாகர்கோவில்: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் காங்கிரசையும், ராகுல் காந்தியையும் தொடர்புபடுத்தி பொன்.ராதாகிருஷ்ணன் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, பீகாரில் இன்று 2ம் கட்ட தேர்தல் நடக்கும் நேரத்தில் டெல்லியில் குண்டு வெடித்தது அரசியலா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், தேர்தல் எப்போது நடக்கிறது? என கேட்க, அதற்கு நிருபர் இன்று என கூறுகிறார். அப்போதும், பொன்.ராதாகிருஷ்ணன் சந்தேகம் தீராமல் இன்றைக்கா என்று கேட்கிறார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், குண்டு வெடித்தால் காங்கிரஸ் ஜெயிக்கும், அப்படியென்றால் காங்கிரஸ்தானே திட்டமிட்டிருக்கும். அப்படியென்றால் ராகுலை கைது செய்ய வேண்டாமா? நீண்ட நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் நாட்டில் நடைபெறாமல் இருந்தது, இப்போது டெல்லியில் எப்படி நடந்தது? யாரால் திட்டமிடப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். இந்த சம்பவத்துக்கு உளவுத்துறை தோல்வி என்று கூறலாமா? என கேட்டதற்கு, உளவுத்துறை அலெர்ட்டாக இருக்கும் துறை, சில தவறுகள் நடக்கும்.
அதை சொல்லத்தெரியவில்லை. முழு விபரம் வராமல் பாதுகாப்பு அமைப்புகளை கொச்சைப்படுத்துவது சரியாக இருக்காது. டெல்லியில் குண்டு வெடித்தால் ஒரு சதவீதம் கூட பாஜவுக்கு நல்லது இல்லை, அப்படியெனில் இந்த குண்டு வைத்தது காங்கிரஸ் கட்சியினர் தானே, 2 நாட்களில் தெரியும். நாட்டிற்கு வேண்டாதவர்கள்தான் பாஜவுக்கு வேண்டாதவர்கள். இன்று தேர்தல், நேற்று குண்டுவெடிப்பு நடந்தது என்றால் மிக பெரிய சதி உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல்காந்திக்கு என்ன ரோல் என்பது தெரிந்துவிடும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
* காங்கிரஸ் கடும் கண்டனம்
காங்கிரஸ் எம்பி விஜய்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பை காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தியை தொடர்புபடுத்தி முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கிய வெறுப்பூட்டும் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன். முன்னாள் ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்த ஒருவர், அரசியல் நலனுக்காக இவ்வளவு கீழ்மட்ட பொய்களை பரப்புவது வெட்ககரமானது மற்றும் நாட்டின் பாதுகாப்பை துஷ்பிரயோகம் செய்யும் ஒரு ஆபத்தான செயல் ஆகும். டெல்லியில் நடைபெற்றது ஒரு சோகமான நிகழ்வு. இந்திய நாட்டினர் அனைவரும் ஓட்டு மொத்தமாக ஒருமித்து நின்று இதை கண்டித்து, மறைந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும் இந்த வேளையில் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் விஷ வார்த்தைகள் அவர்கள் காயத்தை இன்னும் ஆழப்படுத்தும்.
அரசியல் ஆதாயத்திற்காக பாஜ நடத்திய நாடகங்களை இந்த நாடு மறக்கவில்லை. இத்தகைய நெறிமுறையற்ற மற்றும் விஷமக் குரல்கள், அரசியலின் அடிப்படை நாகரிகத்தை சிதைக்கின்றன. நாட்டின் விடுதலைக்காகவும், கிடைத்த விடுதலையை கட்டிக் காக்கவும் பல தியாகங்கள் செய்த காங்கிரஸ் கட்சி மீதும், நாட்டின் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு மக்களோடு பயணித்து வரும் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி மீதும் ஆதாரமற்ற வீண் பழி சுமத்திய பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு கண்டிக்கத்தக்கது. நாட்டு மக்கள், உண்மையை அறிந்துள்ளனர். அவர்கள் இந்த மலிந்த அரசியல் நாடகங்களை தள்ளுபடி செய்து, வெறுப்பை விதைக்க முயல்கின்ற சக்திகளுக்கு தகுந்த பதிலை அளிப்பார்கள்.
