Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து அண்ணாமலை பற்றி அமித்ஷாவிடம் எடப்பாடி புகார் செய்ய திட்டம்: இன்று காலை டெல்லி செல்கிறார்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அண்ணாமலை குறித்து அமித்ஷாவிடம் புகார் செய்ய அவர் திட்டமிட்டு சில ஆவணங்களுடன் செல்வதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6.30 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். மேலும், அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இன்று மாலை அல்லது நாளை காலை அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் மோதல் நீடித்து வருகிறது. தமிழகத்தில் பாஜ, அதிமுக கூட்டணி ஏற்பட்டாலும், கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வேலைகளில் அண்ணாமலை ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எடப்பாடி பழனிசாமியின் புகாரை தொடர்ந்துதான் அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டது. அந்த கோபத்தில் உள்ள அண்ணாமலை தனது ஆதரவாளர்கள் மூலமும், வார் ரூம் மூலமும் அதிமுக கூட்டணியை தோற்கடிக்கும் பணியை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும் கூட்டணி ஆட்சி என்ற விவகாரத்தில் தமிழக பாஜ தலைவர்கள், எடப்பாடி பழனிசாமியின் கருத்தை ஆதரித்துப் பேசும்போது, அண்ணாமலை மட்டும் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று பேசி வந்தார். இதனால் அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கோபத்தில் இருந்து வந்தார். இந்நிலையில்தான் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அண்ணாமலை வாங்கியுள்ளார். மேலும் பல நிறுவனங்களையும் தமிழகத்தில் தொடங்கியுள்ளார். இதற்கான ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளதால், இதற்கான ஆவணங்களையும், கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர் செய்யும் வேலைகளையும் ஆதாரத்துடன் அறிக்கையாக தயாரித்து வைத்துள்ளார்.

இந்த ஆதாரங்களை அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களது சந்திப்புக்கு பிறகு தமிழக பாஜவில் மேலும் மாற்றங்கள் ஏற்படும் என்றும் பரபரப்பு எழுந்துள்ளது. மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனால் அவரது பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். அதை தொடர்ந்து டெல்லி சென்ற செங்கோட்டையன், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதன்பிறகும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதால், இந்த விவகாரம் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் வேண்டும் என்றே நேற்று திட்டமிட்டு, அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களையும், ஆட்சியை கவிழ்க்க பார்த்தவர்கள், துரோகம் செய்தவர்கள், கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தவர்களை மீண்டும் சேர்க்க வேண்டுமா என்று எடப்பாடி கேள்வி எழுப்பியிருந்தார். இதை, அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே சிக்னல் கொடுப்பதாகவே அதிமுகவினர் கருதுகின்றனர். இதனால் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியின் இன்றைய சந்திப்பு பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.