சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜ.விற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: தேசிய தலைவர் நட்டா அறிவிப்பு
சென்னை: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜவிற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே எஞ்சியுள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் பாஜ அணியில் ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் இருந்தனர்.
பாஜ தொடர்ந்து புறக்கணித்ததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ், டிடிவி.தினகரன் அறிவித்தனர். அதே நேரத்தில் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவது தற்கொலைக்கு சமம் என்று டி.டி.வி.தினகரன் கூறிவிட்டார். இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ சார்பில் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான, அறிவிப்பை பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வெளியிட்டார்.
அதன்படி, 2026 தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா, இணை பொறுப்பாளராக முரளிதர் மொஹோல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பைஜெயந்த் பாண்டா எம்பியாகவும், பாஜவின் தேசிய துணை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முரளிதர் மொஹோல் ஒன்றிய விமான போக்குவரத்து துறையின் இணை அமைச்சர். இவர்களின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தான் வரும் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள். அதே நேரத்தில் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்து டெல்லி தலைமைக்கு அனுப்புவார்கள். அதன் பின்னரே யார் வேட்பாளர் என்பதை மேலிடம் அறிவிக்கும். தமிழக பாஜ பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2 பேரும் விரைவில் தமிழகம் வந்து பாஜ நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். வரும் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள்.