சென்னை: பாஜ நிர்வாகிகள் 2 பேரின் பதவியை பறித்து நயினார் நாகேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றிலிருந்து கடந்த மாதம் 13ம் தேதி கன்டெய்னர் லாரி மூலம் ரூ.11 கோடி ரொக்கம் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 2 கார்களில் சென்ற மர்மநபர்கள், அந்த லாரியை வழிமறித்து நிறுத்தி ரூ.3.24 கோடியை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீஸ், திருப்பூரை சேர்ந்த திருகுமார், சந்திரபோஸ் திருவாரூர் பாஜ நகர இளைஞர் அணி முன்னாள் பொதுசெயலாளர் ராம், பாஜ ஓபிசி அணி மாநில பொதுக்குழு உறுப்பினர் துரையரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் 2 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,‘ திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.துரையரசு, திருவாரூர் நகர முன்னாள் பொதுச்செயலாளர் எஸ்.ராம் ஆகியோர் 2 பேரும் சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்கள்,’என்று கூறப்பட்டுள்ளது.