Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ திடீர் சந்திப்பு: பாஜ, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுவது அபாண்டமான பொய் என்கிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று, வைகோ திடீரென நேரில் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் பாஜ, அதிமுகவோடு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுவது அபாண்டமான பொய் என்று வைகோ கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஒருவாரம் சிகிச்சை முடிந்து கடந்த 27ம் தேதி வீடு திரும்பினார். 3 நாள் ஓய்வுக்குப்பின் அவர் நேற்று முன்தினம் தலைமை செயலகம் வந்தார். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து பேசினர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார்.

பிறகு வைகோ அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து விசாரித்தேன். கவின் படுகொலையில் அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். ஆணவக்கொலைகளை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தினேன். மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, திராவிட மாடல் அரசு. மிக அதிக சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று, அறுதி பெரும்பான்மையில் வெற்றி பெறுவோம். இது வரப்போகிற சட்டமன்ற தேர்தல் முடிவாக இருக்கும். ஆகவே, கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போகிறது. அதனால், திமுகவின் தனி அரசு தான் அமையும். ஒன்றிரண்டு ஏடுகளில் அப்பட்டமான பொய்களை, மனம் கூசாமல், மனச்சாட்சி இல்லாமல் நேற்று முன்தினம் முதல்வரை தேமுதிகவினர் வந்து பார்த்தவுடன், மதிமுக வெளியேறும்.

அவர்கள் பிஜேபியோடு, அதிமுகவோடு பேச்சு ஆரம்பித்து விட்டார்கள் என்று ஏதோ பக்கத்தில் இருந்து லைட் பிடித்தது போல, பக்கத்தில் இருந்து கேட்டதை போல ஏன் அபாண்டமான பொய் செய்தியை வெளியிட்டுள்ளனர். ஒரு அரசியல் கட்சியை குறி வைத்து தாக்குவதை மூல நோக்கமாக வைத்திருக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்தை கொண்டும் இந்துத்துவா சக்திகளோடும், ஆர்எஸ்எஸ் பின்னணியுடன் இயங்குகின்ற பாஜவுடனோ மதிமுக இம்மியளவும் உடன்பாடோ, தொடர்போ வைத்து கொள்ளாது. ஓபிஎஸ் சந்திப்பதற்கு பாஜ தலைவர்கள் அப்பாய்மெண்ட் கூட கொடுப்பது இல்லை. சந்திக்க விடாமல் பண்ணும் போது தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ளார். இவ்வாறு கூறினார்.