ஆட்சியில் நாங்க பங்கு கேட்க மாட்டோம்; கூட்டணிக்கு யாரும் வராததால் விரக்தியில் பேசுகிறார் எடப்பாடி: சண்முகம் அட்டாக்
ராமநாதபுரம்: கூட்டணிக்கு அழைத்தும் யாரும் வராத விரக்தியில் எடப்பாடி பழனிசாமி மாறி, மாறி பேசுகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த 21ம் தேதி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியோ இந்த தருணத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மதுரை ஆதீனம் சில மாதங்களுக்கு முன்பாக அவரை கொல்வதற்காக ஒருவர் காரை ஓட்டி வந்ததாக உள்நோக்கத்துடன் ஒரு பேட்டியை கொடுத்திருந்தார். அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் மதுரை ஆதீனம் போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து யாரும் வரவில்லை என்பதால் விரக்தியில் ஒவ்வொரு நாளும் மாற்றி, மாற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார். பாஜவுடன் அதிமுக அணி சேர்ந்திருக்கும் வரையிலும், அவர்களுடன் யாரும் கூட்டணி வைக்க வருவதற்கு தயாராக இல்லை. பாஜ உட்கட்சி பூசல் காரணமாகத்தான் துணை ஜனாதிபதி பதவி விலகியிருப்பதாக தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.