சென்னை: பாஜவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவில் இருந்து வெளியேறுகிறேனா என்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் நடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி அடைந்தேன் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டி இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனால் ஜெயக்குமாரை சரிகட்டும் வகையில் அவருக்கு மாநிலங்களவை பதவி தரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பதவியை எதிர்ப்பார்த்து ஜெயக்குமார் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஜெயக்குமாருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்படவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி மீது ஜெயக்குமார் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் பாஜவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அந்த வகையில் பாஜ கூட்டணியால் அதிருப்தியில் உள்ள ஜெயக்குமாரும் அதிமுகவில் இருந்து ெவளியேற போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று ேபட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
நான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையப்போவதாக வதந்தி பரப்பி வருகிறார்கள். என்னைப்பற்றி வதந்தி பரப்பிய யூடியூபர்களுக்கு நிறைய வருமானம் வந்தால் எனக்கு மகிழ்ச்சி தான். நடக்காத ஒருவிஷயம். எதிர்பார்ப்பவர்களுக்கு அது ஏமாற்றம் தரும் விஷயம். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கே தெரியும். நான் மானஸ்தன் என்பது. பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நிற்கமாட்டேன். திராவிட பாரம்பரியத்தில் வந்தவன் நான்.
பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியை ஏற்று வந்தவன். அப்படி வந்த நான் அவ்வாறு இருக்கமாட்டேன். என் உடலில் அதிமுக ரத்தம் தான் ஓடுகிறது. உடல் மண்ணுக்கு உயிர் அதிமுகவுக்கு. இதுதான் எங்களுடைய கொள்கை. ஆகவே, என்னைப் பற்றி பரவும் வதந்திகள் குறித்து கவலைப்படவில்லை. ஓபிஎஸ் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பொதுச்செயலாளரே விளக்கம் கொடுத்துவிட்டார். அதுவே போதுமானது. இவ்வாறு அவர் கூறினார்.