அதிமுக-பாஜ கூட்டணியில் இருந்து கழற்றிவிட்ட நிலையில் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவாரா? இன்று அறிவிக்கிறார்
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில ஆண்டுகளாக பாஜவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். இதன்மூலம் பாஜ தயவில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று திட்டமிட்டு வந்தார். ஆனால், அதிமுக - பாஜ கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடம் அளிக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வந்தார். இந்தநிலையில்தான், கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார்.
ஆனால், அவரை சந்தித்து பேச மோடி நேரம் ஒதுக்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் தமிழகம் வந்த அமித்ஷாவும் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஓபிஎஸ் தொடர்ந்து விரக்தியில் உள்ளார். இதுபற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, தனிக்கட்சி தொடங்கி விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா அல்லது தனி அணியாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கலாமா என்பது குறித்து ஓபிஎஸ் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், இறுதியாக ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து நேற்று காலை சென்னை செல்வதற்காக ஓ.பன்னீர்செல்வம், அவசரம் அவசரமாக மதுரை விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அவரிடம் செய்தியாளர்கள், ‘‘பாஜ கூட்டணியில் தொடர்கிறீர்களா, உங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?’’ என கேட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அனைத்து கேள்விகளுக்கும் நாளை (இன்று) சென்னையில் உரிய பதில் அளிக்கப்படும்’’ என ஒரே வரியில் பதிலளித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.